வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான ஆற்காடு சாலையில் அமைந்துள்ளது அந்த பிரபலமான தனியார் மருத்துவமனை. இம்மருத்துவமனைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பான சாலையாக ஆற்காடு சாலை காணப்படுகிறது. இதனால் அதிகப்படியான ஆட்டோக்கள், கார், இருசக்கர வாகனம், பேருந்து மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களை சாலை ஓரங்களில் நிறுத்தி விடுவதால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக ஆற்காடு சாலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தினந்தோறும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஆற்காடு சாலையின் வளைவான ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 ஆம்புலென்ஸ்களுக்கு வேலூர் போக்குவரத்து காவல் துறையினர் வீல் லாக் போட்டுச் சென்றுள்ளனர். இதற்கு தனியார் ஆம்புலென்ஸ் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, தனியார் ஆம்புலன்சுகள் போக்குவரத்துக்கு இடையூறாக வரிசையாக நிற்கவைக்கப்படுவதாலும், குறுகிய சாலை என்பதாலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வந்த தொடர் புகாரினால் இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இங்கு போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்த வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தினோம். ஆனாலும் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வருவதால் இவர்களை எச்சரிக்கும் விதமாக இன்று ஆம்புலன்ஸ்க்கு லாக் போட்டு விட்டு வந்துள்ளோம். ஆனால் அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும் ஒரே நேரத்தில் அனைத்து ஆம்புலன்ஸ்களையும் நிற்க வைப்பதற்கு பதிலாக இரண்டு இரண்டு ஆம்புலன்ஸ் ஆக நிற்க வைத்துக் கொள்ள அறிவுறுத்தியும் உள்ளோம். அதனையும் இவர்கள் பின்பற்றவில்லை. ஆகையால் எச்சரிக்கை விதமாக இதை செய்துள்ளோம். போக்குவரத்து இடையூறாக ஆம்புலன்ஸ்களின் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.