திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி நகர்ப் பகுதியில் பழங்குடியின மாணவி (வயது 17) ஒருவர் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி அங்குள்ள தமிழக அரசின் சமூக நீதி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இதன் காரணமாக இந்த மாணவி வழக்கம் போல் இன்று (19.09.2025) மதியம் உணவை உட்கொண்டுள்ளார். அதன் பின்னர் மாணவி பள்ளி வகுப்பறைக்கு வந்துள்ளார். 

Advertisment

இந்நிலையில் மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு உடனடியாக உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி தங்கும் விடுதியில் மதிய உணவு உட்கொண்டு வந்த நிலையில் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடுமலைப்பேட்டை போலீசார் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.