திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது 2 மகன்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இன்று (06.08.2025)) அதிகாலை தோட்டத்தில் 3 பேரும் குடிபோதையில் ரகளை செய்வதாகவும், அவரது மகன்கள் தந்தையைத் தாக்குவதாகவும் குடிமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த குடிமங்கலம் காவல்நிலைய சிறப்பு எஸ்.ஐ. சண்முகசுந்தரம் மற்றும் அவரது ஓட்டுநர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, “எங்களது குடும்ப பிரச்சனையில் தலையிட நீங்கள் யார்?” என ஒருமையில் கூறி இரு மகன்களும் சிறப்பு எஸ்.ஐ. சண்முகசுந்தரத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிறப்பு எஸ்.ஐ .சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதே சமயம் ஓட்டுநராகச் சென்ற காவலர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து கொலையாளிகள் மூவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டனர். தப்பியோடிய கொலையாளிகளைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தந்தை மகன்கள் இடையேயான பிரச்சனை குறித்து விசாரிக்கச் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வெட்டிக் கொலை செய்யப்பட்ட சண்முகவேல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் தளவாய் பட்டினம் என்ற பகுதியைச சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.