கோவை மாவட்டம் பெரிய கடை வீதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (05.08.2025) இரவு இந்த காவல் நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் காவல் நிலைய கட்டத்தில் உள்ள முதல் மாடிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்த கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் அறைக்குச் சென்று 11:00 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கம்போல் இன்று (06.08.2025) காலை காவலர்கள் பணிக்கு வந்தனர்.
அப்போது சம்பந்தப்பட்ட அறைக்குள் சென்றபோது அங்குச் சடலம் ஒன்று இருப்பது தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் காவல் நிலைய வளாகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதோடு தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் புகாரளிக்க வந்த நபர் என்றும், அவர் மனநிலம் பாதிக்கப்பட்டவர் என்றும் என்றும் காவல்துறையின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் உதவி ஆய்வாளர் அறைக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட நபர் யார்? என்ன காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்? என்பது குறித்து தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது. அதே சமயம் இரவு நேரத்தில் பணியில் இருந்த காவலர்களிடமும் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்திற்குள்ளேயே ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.