ஹரியானாவின் கைத்தல் மாவட்டத்தில் ஷீலா கேரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், நேற்று (30-12-25) மதியம் 3 மணி அளவில் நாய்கள் ஒரு கால்வாயில் கிடந்த  சூட்கேஸை இழுத்துச் செல்வதைக் கண்டனர். அப்போது அந்த சூட்கேசில் ஒரு சடலம் இருப்பதை கண்ட அவர்கள் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சூட்கேஸை கைப்பற்றி விசாரணை செய்ததில், அதில் இருப்பது ஒரு பெண்ணின் சடலம் என்றும், அப்பெண் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் என்றும் என்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும், அதனால் அப்பெண் கயிற்றால் கழுத்தில் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகமடைந்தனர்.

Advertisment

இந்த சம்பவம் நடந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், பல நாட்களாக நீரில் இருந்ததால் உடல் உப்பிய நிலையில் காணப்பட்டதால் அடையாளம் காண்பது காவல்த்துறைக்கு சிரமமானதாக இருக்கிறது. அந்த சடலத்தின் கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் ஆதாரத்தை வைத்து, இந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என  புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சுற்றியுள்ள காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சடலம் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று ஆராய்ந்து வருகின்றனர்.

மார்ச் மாதத்தில், ​​ஹிமானி நர்வால் என்ற 22 வயதான காங்கிரஸ் தொண்டரின் உடல் ரோத்தக்கில் உள்ள சாம்ப்ளா பேருந்து நிலைய மேம்பாலம் அருகே ஒரு சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதே போல் மீண்டும் ஒரு பெண்ணின் உடல் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment