சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் பல்லவி. இவர் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். அதே போன்று புளியந்தோப்பு பெரியார் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரும் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட மகளிரணி இணை அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கலைச்செல்வி தனது ஆதரவாளர்களுக்குப் பதவி வழங்கக் கோரி, அவரது ஆதரவாளர்கள் சிலரை அழைத்துக்கொண்டு, பல்லவி வீட்டுக்கு நேற்று (17.11.2025) சென்றுள்ளார். அங்கு அவர் பல மணி நேரமாகக் காத்திருந்தும் பல்லவி அவரது வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. 

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள், பல்லவி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஒருமையில் தீட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பல்லவி தரப்புக்கும், கலைச்செல்வி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு இந்த வாக்குவாதம் முற்றியுள்ளது. அதில் ஒருவரை ஒருவர் மாற்றித்  தாக்கிக் கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாகப் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பல்லவி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதில் கலைச்செல்வி உட்பட 9 பேர் தன்னையும், தனது ஆதரவாளர்களிடமும் தகராறு செய்து தாக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதே சமயம் கலைச்செல்வி தரப்பினரும்,  பல்லவி தரப்பினர் 9 பேர் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் இரு தரப்பினரிடமும் நேற்று போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (18.11.2025) காலை 10 மணியளவில் இரு தரப்பினரையும் விசாரணைக்காகப் புளியந்தோப்பு போலீசார் காவல் நிலையத்திற்கு நேரில் வர அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி இரு தரப்பினரும் மாறி மாறி புளியந்தோப்புக்குக் காவல் நிலையத்திற்கு வந்த இருதரப்பினரிடையே காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புளியந்தோப்பில் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்குவது தொடர்பாகப் பெண் நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியிலும், கட்சி வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.