வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குணசுந்தரி. இவரின் கணவர் பாலசந்தர் (50) திமுக பிரமுகர். இவருக்கு சொந்தமான நிலம் கே.வி.குப்பம் அடுத்த கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள காமராஜபுரம் பகுதியில் உள்ளது. மனைவி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும் இவர்தான் ஊராட்சி மன்ற தலைவர் போல் செயல்பட்டு வருகிறார். சொன்னால் நிழல் ஊராட்சி மன்ற தலைவர் என்று இவரை அழைக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு (03.07.2025) தனது நிலத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது கன்னிகோவில் அருகே இவரை வழிமறித்த நபர்கள் கத்தியால் குத்தியும், வெட்டியும் தாக்கியுள்ளனர். இதில் கூச்சலிட்டவாரு தப்பி ஓடிவந்த பாலசந்தரை பொதுமக்கள் மீட்ட நிலையில் தலையில் வெட்டு காயங்களுடன் தற்போது அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலசந்தரை வெட்டிய நபர்கள் தப்பியோடி உள்ளனர்.

இதுதொடர்பாக லத்தேரி காவல் துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரமேஷின் மனைவியோடு பாலசந்தர் தகாத உறவில் இருந்ததால் வெட்டியதாக கூறப்படுகிறது.