Advertisment

முதியவரைக் கொடூரமாகத் தாக்கிய போலீசார்!

try-sri-rangam-old-man

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று (02.09.2025) தமிழகம் வருகிறார். இதன் ஒரு பகுதியாகத் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி கோவிலுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (03.09.2025) மாலை வருகை தந்து தரிசனம் செய்ய உள்ளார். இதற்காகக் கோவில் நிர்வாகம், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோவிலில் ஐந்தடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருமே தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் வழக்கமாக மதிய நேரங்களில் வயதானவர்கள் யாசகம் பெறக்கூடியவர்கள் கோவில் வளாகத்தில் உறங்குவார்கள். அதோடு அங்கேயே தங்கி இருப்பார்கள். இந்நிலையில் குடியரசுத் தலைவர் நாளை வருகை தர உள்ள நிலையில் அங்கிருப்பவர்களை அப்புறப்படுத்தும் பணியிலும், அவர்களை முகாமிற்கு அனுப்பும் பணியிலும் காவல்துறையினர் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவிலின் தெற்கு நுழைவு வாயில் அருகே உள்ள ரங்க விலாச மண்டபம் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது முதியவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் முதியவரைக் கொடூரமாகத் தாக்கியும் எட்டி உதைத்தும், அவரை அங்கிருந்து தூக்கிச் சென்றனர். இது தொடர்பான காட்சிகள் வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது விசாரணையானதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அவர் கோவிலை விட்டுச் செல்ல முடியாது எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. எனவே முதியவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

trichy incident police temple sri rangam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe