Police imposes a very important condition for Vijay's election campaign in Erode
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் வருகிற 16 ஆம் தேதி தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பை நடத்த இருந்தார். ஆனால், காவல்துறை சார்பில் 84 விதிகள் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை பூர்த்தி செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறி 16ஆம் தேதி நடத்த வேண்டிய பரப்புரை, 18ஆம் தேதியன்று நடத்த காவல்துறையிடம் மாநில தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செங்கோட்டையன் அனுமதி கேட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா, அனுமதி கேட்ட சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். விஜய் பேசும் இடம், தொண்டர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, விஜய்யின் மக்கள் சந்திப்புக்கு அனுமதி வழங்கினார். அதே சமயம் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் ரூ.50,000 வாடகையுடன் அந்த இடத்தை பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை வழங்கியது.
இந்த நிலையில், ஈரோட்டில் 18ஆம் தேதி நடைபெறவுள்ள விஜய்யின் மக்கள் சந்திப்புக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட இடம், தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள இடம் என்பதால் போக்குவரத்தை இடையூறு ஏற்படுத்த கூடாது, விஜய் வரும் நேரம், புறப்படும் நேரம், எந்த வழியில் வருகிறார் என்பது குறித்து உடனுக்குடன் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும், பொதுமக்களை அதிக நேரம் வெயிலில் நிற்க வைக்கக் கூடாது, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக 11 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்து விட வேண்டும், வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்கு வசதியாக மேற்கூரை கட்டாயம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 43 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூரை கட்டாயமாக அமைக்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ள நிலையில், அந்த இடத்தில் இதுவரை எந்த விதமான மேற்கூரைகளும் அமைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Follow Us