கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, கரூர் சம்பவம் தொடர்பாக தவெக மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோருக்கு நீதிபதி செந்தில் குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து, விஜய் கரூர் சென்ற போது வேலாயுதம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பிரச்சார வாகனத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது தொடர்பாக ஹிட் அண்ட் ரன் வழக்குப்பதிவு செய்து விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில், தவெக கட்சியின் பனையூர் அலுவலகத்தில் உள்ள விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய தமிழக போலீசார் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், பைக் மீது மோதியது தொடர்பாக விஜய்யின் பிரச்சார வாகனத்தின் ஓட்டுநர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தின் ஓட்டுநர் சந்துரு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை இயக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.