காவல்துறையினர் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு நடக்காமல் விசாரணை என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமையை நிகழ்த்தியுள்ளனர் என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர். அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.

இன்றும் நான்காவது நாளாக விசாரணையானது நீதிபதி ஜான் சுந்தர் தலைமையில் தொடங்கியது. இன்றைய விசாரணையில் திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் உள்ளிட்டோரிடம் நீதிபதி ஜான் சந்தர் விசாரணை நடத்தினார்.

Advertisment

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மடப்புரத்தில் உள்ள அஜித்தின் வீட்டுக்கு சென்று அவரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அஜித்தின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து தன் சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.   அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மருத்துவ அறிக்கையின் வாயிலாக காவலர்களின் அத்துமீறலை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். மடப்புரத்தில்
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு காவல்துறை அத்திமீறி உள்ளது. அதிமுக மீட்பு குழுவின் சார்பில் நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறை  தட்டி கேட்காததால் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வந்துள்ளது. இந்த சூழ்நிலை மாற வேண்டும்.இல்லை என்றால் திமுக மிகப்பெரிய சரிவை சந்திக்கும்.

திறமையாக வாதாடி தவறு செய்தவர்கள்  குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுக்க  வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைமா என்பதை சொல்வதற்குநான்  ஒன்றும் ஜோசியர் அல்ல. அதிமுக தொண்டர்களின் உரிமைகளை காப்பாற்றிக் கொள்ள நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணியின் ஒரு அங்கமாகத்தான் நான் தொடர்ந்து செயல் கொண்டிருக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். 


த.வெ.க. தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, “ஏற்கனவே விஜய் பற்றிய கருத்தை நான் சொல்லி இருக்கிறேன். இப்பொழுதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார். அவரது கொள்கை கோட்பாடு எதை நோக்கி செல்கிறது என்பதை வைத்துத்தான் கருத்து சொல்ல முடியும்” என்றார்.