கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அமைந்துள்ளது எஸ்.கொளத்தூர் கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி. இவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ள நிலையில், அதில் கரும்பு பயிர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி மதியம் கரும்பு பயிருக்கு உரம் இடுவதற்காக பொன்னுசாமி தனது விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளார். அவர் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் திரும்பாததால் உறவினர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர்.
ஆனால், அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் உடனடியாக விவசாய நிலத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு தலையில் ரத்தக் காயங்களுடன் பொன்னுசாமி சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அப்பகுதி மக்கள், நில உரிமையாளர்கள், வேலையாட்கள் அனைவரும் கண்ணீர் விட்டு கதறினர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் உடலை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் எஸ்பி பிரதாப் குமார் தலைமையிலான போலீசார் பொன்னுசாமி உயிரிழந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், 24 மணி நேரத்திற்கு மேலாகியும் குற்றவாளிகளை கைது செய்யாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் “குற்றவாளிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம்” என்று கூறி, கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் வைரக்கண்ணன், திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். “சொத்துத் தகராறா, பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வோம்” என்று உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் மூன்று நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் யாரும் சிக்காத நிலையில், போலீசார் சந்தேக நபர்களைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us