கோவை உக்கடம் பகுதியில், சொகுசு காரில் வந்த இளைஞரை காவலர்கள் தாக்கும் வீடியோ வைரலான நிலையில், கோவை மாநகர காவல்துறை இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
கோவை வின்செட் சாலையில் உக்கடம் போலீசார் கடந்த மாதம் 24 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த BMW காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் வந்த இளைஞரை சுமார் ஐந்து காவலர்கள் கைகளாலும் லத்தியாலும் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாக வைரலானது. கோவை மாநகர காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கைக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தது. சமூக ஆர்வலர்கள், தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து இரண்டு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகளில் சம்பவம் நடந்தது குறித்து இளைஞரும், காவல்துறையினரும் தனித்தனியாக பேசுவது பதிவாகி இருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/12/101-2025-07-12-10-36-08.jpg)
காவல்துறை வெளியிட்ட ஒரு வீடியோவில், தனது பெயர் அபுதாகிர் என்று கூறிய அந்த இளைஞர், "கடந்த ஜூன் 24 ஆம் தேதி கோட்டைமேடு வழியாக காரில் வந்தபோது, காவலர்கள் எனது காரை சோதனை செய்தனர். ஒரு காவலர் வாகனத்தில் ஏறியபோது, பதட்டத்தில் காரை எடுத்துவிட்டேன். அப்போது காவலரின் பெல்ட் எனது காரில் மாட்டிக்கொண்டது. இந்தக் காட்சிகளை மாடியிலிருந்து யாரோ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். எனக்கும் காவல்துறைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டோம்," என தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/12/100-2025-07-12-10-36-24.jpg)
மற்றோரு வீடியோவில் பேசிய, உக்கடம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஆனந்தகிருஷ்ணன், “சம்பவத்தன்று வின்சென்ட் சாலையில் உதவி ஆய்வாளருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். BMW காரில் வந்தவர்களை நிறுத்தி, அவர்கள் போதையில் உள்ளனரா எனச் சோதனை செய்தோம். அப்போது, அவர்கள் என்னை இழுத்து வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்து கத்தினேன். அங்கிருந்த சக காவலர்கள் காரை நிறுத்தி, கதவைத் திறந்து என்னை மீட்டனர். பின்னர் காரில் வந்தவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த பொழுது அவர் பெயர் அபுதாகிர் என்பது தெரிய வந்தது. போதையில் இருக்கிறாரா என பரிசோதனை செய்த போது, அந்த கருவியில் அவர் குடிபோதையில் இருக்கிறார் என்பதையும் உறுதி செய்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நாள், அபராதம் செலுத்தி அவர் வாகனத்தை மீட்டுச் சென்றார்” எனத் தெரிவிதிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், உதவி ஆய்வாளர் உட்பட காவலர்கள் இளைஞரை கடுமையாகத் தாக்கிய காட்சிகள் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால், காவல்துறை வெளியிட்ட வீடியோக்களில், தன்னை போலீசார் தாக்கியது குறித்து இளைஞர் அபுதாகிர் எந்த தகவலும் சொல்லவில்லை. அதேபோன்று, இளைஞரை தாக்கியது குறித்து காவலர் ஆனந்த கிருஷ்ணனும் எதையும் தெரிவிக்கவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
காவலர் உண்மையில் காரில் கடத்தப்பட்டிருந்தால், அபுதாகிர் மீது கடத்தல் வழக்கு அல்லது அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன்? குடிபோதையில் இருந்த இளைஞரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தாதது ஏன்? காவலர்கள் இளைஞரை கடுமையாகத் தாக்கியது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்று பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.
மேலும், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கும் விதமாக, கோவை மாநகர காவல் துறை தரப்பில் இருந்து இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/12/103-2025-07-12-10-35-46.jpg)