Police explain the incident of Madurai ITI student hostel incident Photograph: (madurai)
மதுரை திருமங்கலத்தில் ஐடிஐ விடுதியில் மாணவரை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் இருக்கிறது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செல்லும் வழியில் உள்ளது செக்கானூரணி என்ற பகுதி. இங்கு தொழிற்பயிற்சி கல்விக்கான ஐடிஐ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கேயே விடுதியும் அமைந்துள்ளது. இந்நிலையில் விடுதியில் இருந்த மாணவனை உடன் தங்கி இருந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்தது.
அதில் மாணவனை நிர்வாணப்படுத்தி காலணியைக் கொண்டு தாக்கி துன்புறுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது ராக்கிங் சம்பவமா அல்லது வன்கொடுமை சம்பவமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியின் காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி ஜவஹர் சம்பவம் நடந்த விடுதியில் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். அதேநேரம் காவல்துறை தரப்பிலும் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்ற பொய்யான தகவல் பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் உரிய முறையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.