Police dig up the skeleton The incident that happened 10 months ago
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் 10 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட எலும்புக்கூட்டை காவல்துறை தோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 45 வயதான பெண் ரேஷ்மா. இவரது கணவர் ராம்பாபு சங்க்வார். இவர்களுக்கு நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மாவின் கணவர் ராம்பாபு சங்க்வார் இறந்துவிட்டார். இதற்கிடையில், அண்டை வீட்டுக்காரரான கோரேலாலுடன் ரேஷ்மாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.
பின்பு சிறிது காலத்தில், அவர் தனது குழந்தைகளை விட்டுவிட்டு கோரேலாலுடன் வாழத் தொடங்கினார். ரேஷ்மாவின் இந்த முடிவால் வருத்தமடைந்த பிள்ளைகள் அவருடனான உறவைத் துண்டித்துக்கொண்டனர். இருப்பினும், ரேஷ்மாவின் குடும்பத்தில் கடந்த நவம்பர் 29 அன்று நடந்த திருமண நிகழ்ச்சிக்காக அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இருந்தபோதிலும் ரேஷ்மா திருமணத்திற்கு வரவில்லை. இதனால் வருத்தமடைந்த ரேஷ்மாவின் மகன் பப்லு என்பவர், ரேஷ்மாவைத் தேடி அவர் இருப்பிடத்திற்கு சென்றார். அங்கு ரேஷ்மா இல்லை. இதனால் கொரேலாலிடம் பப்லு தனது அம்மா எங்கே என்று கேட்டார்? அதற்கு உனது அம்மா எப்போதும் வரமாட்டார் என கொரேலால் பதிலளித்தார்.
அவர் கிண்டல் செய்வதாக எண்ணிய பப்லு, அவர் சொன்னதை பொருட்படுத்தாமல் போய்விட்டார். இருப்பினும், மற்ற உறவினர்கள் கேட்ட போதும் எல்லோரிடமும் இதே பதிலைத்தான் கொரேலால் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பப்லு, தனது அம்மாவை காணவில்லை என கடந்தாண்டு டிசம்பர் 29 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், கொரேலாலை காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில், தான் ரேஷ்மாவை பிரிய நினைத்ததாகவும், அதனால் ரேஷ்மாவை அவரது உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கும்படியும் கூறியுள்ளார். அதற்கு ரேஷ்மா மறுப்பு தெரிவித்ததாகவும் அதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும், அப்படி ஒரு நாள் நடந்த சண்டையில் ரேஷ்மாவை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் கூறினார். இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருந்த சடலத்தை, திக்வாபூர் கிராமத்தில் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் கொண்டு போய் புதைத்து விட்டதாகவும் கூறினார். இந்த சம்பவம் நடந்து 10 மாதங்களாகி விட்டதாகவும் கொரேலால் கூறினார்.
கொரேலாலின் வாக்கு மூலத்தைத் தொடர்ந்து, நேற்று இரவு 11 மணியளவில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சடலத்தின் எலும்புக்கூட்டினை தோண்டி எடுத்தனர். எலும்புக்கூடு, அங்கிருந்த ஆடைகள் மற்றும் நகைகளை வைத்து அடையாளம் காணப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறை துணை ஆணையர் தீபேந்திர நாத் சௌத்ரி கூறுகையில், ‘பப்லு தனது தாயைக் காணவில்லை என புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் கொரேலால் உட்பட சில நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், கொரிலாலை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, விசாரணையில் குற்றம் செய்ததை ஒப்புகொண்டார். அதன் பின்னர், சடலத்தின் எலும்பு கூடு மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. டிஎன்ஏ சோதனையும் நடைபெற்று வருகிறது. மேற்படி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார்.
Follow Us