சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அந்த பேராசிரியர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''2010 ஆம் ஆண்டு என்னுடைய பிஎட் ஸ்டுடென்ட் நிகிதா. அதன் மூலமாகத்தான் அந்த குடும்பத்தில் எனக்கு அறிமுகமானது. அவர்கள் என்னுடைய உறவினர்களும் கூட. கோவிலில் நடக்க முடியாமல் நாடகம் போட்ட சிவகாமி அம்மையார் எனக்கு நைட் 11:45க்கு போன் செய்து இரண்டே நாளில் அரசு வேலை உடனடியாக ஒன்பது லட்சம் கொண்டு வாங்க வேலை வாங்கி தந்து விடுகிறோம் என சொன்னார். ஆனால் சில காலத்தில் அப்படியே குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்கள். கஞ்சிக்கு வழியில்லை பணத்தை கொடுங்கள் என கேட்கும் பொழுது செத்தாலும் பரவாயில்லை ஒரு ரூபாய் கொடுக்க முடியாது என விரட்டி விட்டார்கள்' என கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
பேராசிரியரின் புகாரை தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலர் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர். அஜித்தின் மரணம் மற்றும் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை தொடர்ந்து நிகிதாவை போலீசார் கைது செய்ய முயன்று வருவதாகக் கூறப்படும் நிலையில் அவர் தலைமறைவானதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டீக்கடை ஒன்றில் நிகிதாவும் அவருடைய தாயுடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் புகாரளித்து இரண்டு மணி நேரமாகியும் போலீசார் அங்கு வரவில்லை. பின்னர் அங்கிருந்த ஹோண்டா சிட்டி காரில் ஏறி கோவையின் நோக்கி நிகிதா புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான ஆடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அந்த ஆடியோவில், 'திருப்புவனத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் அடித்து கொலை செய்தார்களே அதில் கம்ப்ளைன்ட் கொடுத்த பெண் தலைமறைவாகி விட்டாங்கனு பேப்பர், டிவியில சொல்லி இருந்தாங்க. அந்த பொண்ணு, அவங்க அம்மா, அவங்க மகனோ தம்பியோ தெரியாது மூணு பேரும் காரில் வந்தார்கள். நாங்க டீ சாப்பிட போகும்போது பார்த்தோம். நீங்க தலைமறைவுன்னு சொன்னீங்க. அவங்க கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருக்காங்க என 100-ல் புகாரளித்தேன். ஆனால் யாரும் வரவில்லை' என பேசும் அந்த ஆடியோவும் வைரலாகி வருகிறது.