Police deployment creates stir for Mamata banerjee brings those removed from SIR to Delhi
சிறப்புத் தீவிர வாக்காளர் வரைவு பட்டியல் (எஸ்.ஐ.ஆர் ) பணிகளில் பல குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளதாக நீண்ட காலமாகக் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் திமுக மற்றும் மேற்குவங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எஸ்ஐஆரில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை முறைப்படுத்தச் சட்ட ரீதியிலான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், எஸ்ஐஆர் பணிகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இறந்துவிட்டதாகக் கூறி 150 நபர்களின் பெயர்களை, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு நீக்கப்பட்ட 150 நபர்களையும் அழைத்துக்கொண்டு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க இன்று வந்துள்ளார். தற்போது அவர்கள் அனைவரும், டெல்லியிலுள்ள அம்மாநில இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, அந்த இல்லத்தின் முன்பாக டெல்லி காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மம்தா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, “தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திப்பதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். முறையாக அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பிறகே இங்கு வந்துள்ளோம். இருப்பினும் எங்களை காவல்துறை முற்றுகையிட்டுள்ளது. நாங்கள் காவல்துறையை விமர்சிக்கவில்லை. ஏனென்றால் இது அவர்களுடைய தவறு இல்லை. ஒரு காவல்துறை பேருந்தின் மூலமாக காவல்துறையினர் இங்கு வந்துள்ளனர். டெல்லியில் குண்டு வெடிப்பின் போது இந்த காவல்துறை எங்கே சென்றது? ஆனால், நாங்கள் டெல்லிக்கு வந்தவுடன் இவ்வளவு காவல்துறை இங்குக் குவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இன்று டெல்லி வந்தவுடன் டில்லியே பயப்படுகிறது. நாங்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கான மக்களை இங்கு அழைத்துக்கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. நாங்கள் தற்போது, எஸ்ஐஆர் நடவடிக்கையின் மூலம் இறந்தவர்கள் என்று கூறி தேர்தல் ஆணையம் வாக்காளர்ப் பட்டியலிலிருந்து பெயரை நீக்கிய 150 நபர்களை மட்டுமே இங்கு அழைத்து வந்துள்ளோம். இதற்கே டெல்லி காவல்துறை இங்குக் குவிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையால் யாரையும் காப்பாற்ற முடியாது. இன்னும் இங்கு நிலப்பிரபுத்துவ நிர்வாக முறை தான் உள்ளது” எனத் தெரிவித்தார்.
Follow Us