Police deployed near 'Cricket Board' that caused social conflict - Ilayangudi Photograph: (sivakangai)
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இரண்டு சமூகத்தினர் மாறி மாறி மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்துள்ள இளமனூர் பேருந்து நிலையம் பகுதியில் ஒரு சமூகத்தினர் கிரிக்கெட் கிளப் பலகையை சமூக அடையாளத்தோடு நிறுவி இருந்தனர். அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு அருகிலேயே தங்களுடைய சமுதாய அடையாளம் கொண்ட பெயர்ப் பலகையை நிறுவினர். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக உருவெடுத்தது.
இதில் மாறி மாறி இரு தரப்பினர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்ட நிலையிலும் கலவரம் கட்டுக்குள் வராத நிலை ஏற்பட்டது. இதில் இருதரப்பில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மோதலை தடுக்கச்சென்ற இரண்டு போலீசார் லேசான காயத்துடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது எஸ்.பி சிவபிரசாத் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
  
 Follow Us