அண்மையாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்தவண்ணம் உள்ளன.
அண்மையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், அது புரளி எனத் தெரியவந்தது. அதேபோல், புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, புதுச்சேரி முதலமைச்சர் இல்லம், தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு, சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருக்கும் சுங்க இல தலைமை அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டிருந்தது.கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய்யின் வீடு ஆகிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள அன்புமணியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதேபோல, திண்டிவனத்தில் வசித்து வரும் ராமதாஸ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. இந்த இரு மிரட்டல்களும் தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதையடுத்து, டிஜிபி அலுவலகத்தில் இருந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இரு வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், கூடுதல் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.