மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கடந்த 21.08.2025 அன்று  நடைபெற்றது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.

Advertisment

மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் தனியார் பவுன்சர்கள் புடைசூழ ராம்ப் வாக் செய்தார். அப்போது விஜய்யை  நோக்கி ஓடிவந்த பல தொண்டர்கள் பவுன்சர்களால் தடுக்கப்பட்டனர். அப்போது இளைஞர் ஒருவரை பவுன்சர் ஒருவர் தூக்கி கீழே எறிந்த நிலையில் அந்த இளைஞர் தலைகீழாக விழுந்த காட்சி சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இளைஞரை தூக்கி வீசிய விஜய்யின் பவுன்சர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் புகார் அளித்துள்ளார். தன்னை பவுன்சர்கள் கொண்டு குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.