பிரபல யூடியூபர்களாக உள்ள கோபி, சுதாகர் மற்றும் அவரது குழுவினர் யூடியூப்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி சமீபத்தில் ‘சொசைட்டி பாவங்கள்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராகியது. இந்நிலையில் இந்த வீடியோவை குறிப்பிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த புகார் மனுவில், “திருநெல்வேலியில் இரு குடும்பங்கள் இடையேயான மோதலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களைக் குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவு படுத்தும் விதமாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இந்த வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற வீடியோக்களை வெளியிடாத படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோவில் வன்முறையைத் தூண்டும் வகையில் வசனம் உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.