கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (02.11.2025) இரவு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து 7 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், துடியலூரில் உள்ள காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த 3 பேரை சுட்டுப் பிடித்துள்ளனர். அவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்த 3 பேரும் குணா (30), சதீஷ் (20) மற்றும் கார்த்திக் (21) என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த சில வருடங்களாக கோவை இருவூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளனர் என்பதும், இந்த மூன்று பேர் மீது காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன என்பது குறித்து கோவை மாநகர் காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக 7 தனிப்படைகள் அமைத்து பல்வேறு விதமான அறிவியல்பூர்வமான ஆதாரங்களை திரட்டி குற்றவாளிகள் பற்றி அறிந்தோம். அதன் பிறகு அவர்கள் துடியலூர் வெள்ளகிணறு பகுதியில் தலைமறைவாக அறிந்து பிடிக்க முயன்றோம். அப்போது அவர்கள் ஆயுதங்களை பயன்படுத்தி காவலர் ஒருவரை தாக்கினார்கள். அதனால் போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி 3 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

Advertisment

இதில் சதீஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். குணா மதுரையைச் சேர்ந்தவர். சதீஷ் மற்றும் கார்த்தி சகோதரர்கள், குணா அவர்களது உறவினர். இவர்கள் 10 வருடங்களுக்கு மேலாக இங்கு இருக்கிறார்கள். குற்றம் சாட்டபட்டவர்கள் மீது கிணத்துக்கிடவு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, கே.ஜி. டி.சாவடியில் திருட்டு வழக்கு, துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு உள்ளிட்ட 4,5 வழக்குகள் இருக்கிறது. கடைசியாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் கடந்த 30 நாட்களாக வெளியே இருக்கிறார்கள். அவர்கள் வேலை செய்யும் இடமான இருகூரில் மது அருந்திவிட்டு சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி அரிவாள் மற்றும் கற்களால் தாக்கியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 200,300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இவர்கள் தான் குற்றவாளிகள் என்பது தெரியவந்தது” என்று கூறினார்.