Police Commissioner busts illegal gang in Nellai
அண்மையில் சென்னையிலிருந்து மாறுதலாகி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பிற்கு வந்தவர் மணிவண்ணன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த போது, மாவட்டத்தின் ரிமோட் ஏரியா மற்றும் சென்சிட்டிவ் பகுதிகளான முன்னீர்பள்ளம், தருவை, திருத்து, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கேங்ஸ்டர் மோதல்கள் மற்றும் கிராமங்களில் வெடித்த கலவரச் சூழலையும் திறம்படக் கையாண்டதோடு குற்றப் புலனாய்வு விசாரணைகளில் சீனியர் ஆபீசர். மேற்படி பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் இந்த மோதல்களை தடுப்பதற்கும் ஒரு முடிவிற்குக் கொண்டுவரவும் பதற்றக் கிராமங்களில் காவலை பலப்படுத்தியதோடு தானே இரவு முழுக்க தனியாகவே சைக்கிளில் ஏரியாவை சுற்றி வந்து பதற்றத்தை தணித்தவர். இது ஒரு வித்தியாசமான நடவடிக்கை என்று அப்போது பேசப்பட்டது. தற்போது பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகரக் கமிஷனராக மணிவண்ணன் பொறுப்பேற்றதால் குற்றவாளிகளில் பலருக்கு குளிர் ஜூரம் அடிக்கத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் நெல்லைக்கு மாறுதலாகி வந்த உடனேயே கிடைத்த ஆணித்தரமான தகவலின் அடிப்படையில் கள்ளத் துப்பாக்கிக் கும்பலை வாரிச்சுருட்டியதுதான் தற்போது நெல்லை மாநகரில் திகில் பேச்சாகியிருக்கிறது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநகரம் முழுக்க பரபரப்பிலிருக்க, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ஒருவர் கள்ளத்துப்பாக்கிகளை வாங்கி பதுக்கி வைத்து அதனை ஒன்றரை லட்சம் வரை விற்பனை செய்ததாக கமிஷனர் மணிவண்ணனுக்கு தகவல் கிடைதது. அதன்படி, அவரது உத்தரவின் பெயரில் துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார், நெல்லை மற்றும் மேலப்பாளையத்தில் உள்ள அக்பர் தெருவில் இருக்கும் ஆமீர் சுகைல் என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/17/guns2-2026-01-17-14-58-13.jpg)
அதில், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து ஆமீர் சுகைலை கைது செய்து தங்களின் விசாரணைக்குள் கொண்டு வந்தனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், இந்த டீலிங்கில் பெருமாள்புரத்தைச் சேர்ந்த ரத்னபாலா மற்றும் ரகுமானியபுரத்தைச் சேர்ந்த முசமில் முர்சித் என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கின்றனர். கைதான இவர்களின் மீது ஆயுதத் தடைச் சட்டம் பிரிவுகள் 25(1), 27(1)ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் அமைப்பு ரீதியான குற்றங்களைத் தடுக்கும் சட்டமான பிஎன்ஸ் III(4) மற்றும் பயங்கர ஆயுதத்துடன் சட்ட விரோதமாக ஒன்று கூடுதலைத் தடுக்கும் பிஎன்எஸ் 191(2), 191(3) ஆகிய கடும் சட்டப்பிரிவு வழக்குகள் அவர்களின் மீது பதியப்பட்டிருக்கிறது.
இதையடுத்து அவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாராம் நடத்திய விசாரணையில், நெல்லை மாநகர முக்கிய அரசியல் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட நிர்வாகியான ரத்னபாலன், கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வந்திருக்கிறார். அண்மையில் இந்த துப்பாக்கியை விற்பனை செய்ய முடிவு செய்த ரத்னபாலா, ஆமீர் சுகைல், முசமில் முர்சித் ஆகியோர் உதவியுடன் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுள்ளார். அந்தத் துப்பாக்கியை வாங்கிய திண்டுக்கல்லின் அந்த முக்கிய பிரமுகர், அதனை சுட்டுப் பார்த்த போது அது மிஸ்ஃபயர் ஆகியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியான அந்த நபர், அந்தத் துப்பாக்கியையும் எஞ்சிய தோட்டாக்களையும் அவர்களிடமே திரும்பக் கொடுத்திருக்கிறார். இந்தத் துப்பாக்கி சரியாக செயல்படவில்லை என்பதால் அவர்கள் அதனை நெல்லைக்குக் கொண்டு வந்தபோதுதான் போலீசாரிடம் கள்ளத் துப்பாக்கியுடன் இவர்கள் சிக்கியிருக்கிறார்கள். மேலும் ரத்னபாலன், கடந்த 2020ம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து கள்ளத் துப்பாக்கி ஒன்றை வாங்கி வந்துள்ளார். 4 ஆண்டுகளாக வீட்டிலேயே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது தெரியவந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/17/gun2-2026-01-17-14-59-03.jpg)
விசாரணையின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிபட்ட இந்தக் கள்ளத் துப்பாக்கி 7.65 மிமீ ரகப் பிஸ்டல் வகையைச் சேர்ந்தது. தொழிற்சாலைகளில் முறையாகத் தயாரிக்கப்படும் துப்பாக்கிகளில் இருக்கும் நேர்த்தி இதில் இல்லை. ஹேன்ட் மேட் தயாரிப்பானது இது. எந்த விதமான வரிசை எண்ணும் இல்லாத சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளத் துப்பாக்கியாகும். இதுபோன்ற கள்ளத் துப்பாக்கிகள் நெல்லை மற்றும் நெல்லையை ஒட்டிய ஏரியாக்களிலுள்ள கேங்ஷ்டர்களுக்கு விற்கப்பட்டுள்ளதா என்பது பற்றி விசாரணை நடந்துவருகிறது. மேலும், திண்டுக்கலைச் சேர்ந்த ஒருவர் இதில் தொடர்பில் உள்ளார். இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
இதுகுறித்து நாம் நெல்லை மாநகர கமிஷனர் மணிவண்ணனிடம் பேசியபோது, பிடிபட்ட கள்ளத்துப்பாக்கி மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் மீது கடுமையான ஆயுதத் தடைச் சட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கேங்ஸ்டர்களுக்கு இதுபோன்ற கள்ளத் துப்பாக்கிகள் விற்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். பரபரப்பான பண்டிகை நாட்கள் மற்றும் புயலடிக்கிற தேர்தல் பரப்புரைகள் மையங்கொள்ளவிருக்கிற சூழ்நிலையில் நெல்லையில் கள்ளத் துப்பாக்கிகள் பிடிபட்டது திகிலையும் பீதியையும் கிளப்பியிருக்கிறது.
Follow Us