கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் பொருட்டு அவ்வப்போது காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வல்லம்படுகையைச் சேர்ந்த நவீன் (24) என்பவர் தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில் 22-ஆம் தேதி அண்ணாமலைநகர் போலீஸ் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் இருந்தபோது சுமார் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த சிலரைப் பிடித்தனர். அவர்களில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான நவீன் (24) என்பவரும் ஒருவர். அவரிடம் நடத்திய விசாரணையில் மாரியப்பா நகர் பகுதியில் உள்ள ஒரு புதரில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக நவீன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் நவீனுடன் அவர் கூறிய இடத்திற்குச் சென்றனர்.
அப்போது குற்றவாளி நவீன் திடீரென அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் ஐயப்பனை வெட்டினார். இதில் காவலர் ஐயப்பனின் கையில் ரத்தம் கொட்டியது. உடனே காவல் ஆய்வாளர் அம்பேத்கர் நவீனை எச்சரித்தார். ஆனாலும் நவீன் எச்சரிக்கையை மீறி போலீசாரை மீண்டும் வெட்ட வந்தார். அப்போது காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தற்காப்புக்காக துப்பாக்கியால் நவீனின் கால் முட்டியில் சுட்டார். இதில் ரத்தம் வழிந்த நிலையில் நவீன் சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து போலீசார் குற்றவாளி நவீனையும் காவலர் ஐயப்பனையும் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. பிரதீப் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த காவலர் ஐயப்பனைப் பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
பின்னர் குற்றவாளி நவீன் சுடப்பட்ட மாரியப்பாநகர் பகுதிக்குச் சென்ற எஸ்.பி. ஜெயக்குமார் அந்த இடத்தைப் பார்வையிட்டு நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் அங்கிருந்த கத்தி, துப்பாக்கிக் குண்டு உள்ளிட்டவற்றையும் எஸ்.பி. ஜெயக்குமார் பார்வையிட்டார்.
சிதம்பரத்தில் பிரபல கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us