கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளான தும்பை பாச்சேரி மோட்டாம்பட்டி கிராமத்தில் உள்ள மணியாற்றில் தொடர்ந்து இரவு நேரங்களில் அரசு அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக மணல் திருட்டு நடைபெறுவதாக திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபனுக்கு தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த தகவலின் அடிப்படையிலும், டிஎஸ்பி பார்த்திபன் உத்தரவின் பேரிலும் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் தும்பை பாச்சேரி மோட்டாம்பட்டி பகுதியில் திடீர் வாகன சோதனைகள் ஈடுபட்டனர்.
அப்போது, மணியாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டு மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். சிக்கியவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மற்றும் எஸ்.வி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் இருவரும் தொடர்ந்து மணல் கடத்தல ஈடுபடுவதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து, திருக்கோவிலூர் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக மணல் மற்றும் மண் கனிமவளக் கொல்லையில் ஈடுபடும் நபர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த பகுதிகளில் கனிம வள திருட்டு நடப்பது புதியல்ல. காவல்துறை வருவாய்த்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அது நன்றாகவே தெரியும். அவர்கள் கண்டுக்கொள்ளாமல் இருக்க மாதம் மாதம் மாமூல் செல்கிறது. அதனால் இவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை. இப்போது பிடிக்கப்பட்ட லாரியும் மாத மாமுல் சரியாக தந்திருக்க மாட்டார்கள். அதனாலேயே பிடித்து வழக்கு போட்டு உள்ளார்களே தவிர இவர்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றுகுற்றம் சாட்டுகின்றனர்.