புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழா கடந்த 1ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த கோயிலின் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட தங்க கொலுசு போட்ட 33 அடி உயர பிரமாண்ட வெள்ளை குதிரை சிலைக்கு நேர்த்திக்கடன் வைத்துள்ள பக்தர்கள் அதே உயரத்தில் மலர்கள், பழங்கள், காகித மாலைகள் அணிவிப்பது வழக்கம்.
இதனைக் காணவே தமிழ்நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இந்த ஆண்டு பணமாலை உள்பட 3 மாலைகள் குதிரை சிலைக்கு அணிவிக்கப்பட்டது. அதிக கூட்டம் கூடுவதை அறிந்த சில இளைஞர்கள், இந்த கோயிலுக்கு போகும் வழியில் நின்று ஒதுக்குப்புறமாக தனியாகச் செல்வோரை மிரட்டியும், தாக்கியும் பணம், செல்போன்களை பறித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த போலீசார் மறுநாள் சாதாரண உடையில் ஒதுக்குப்புறமான இடங்களில் ரோந்துப் பணியில் இருந்தனர். இதனை அறிந்த வழிப்பறிக் கும்பல் கோயில் அருகிலேயே வில்லுனி ஆற்றுப் படுகையில் சுற்றியுள்ளனர். அந்தப் பகுதியில் தனியாக ஒதுங்கியவர்களை தாக்கி பணம், நகை, செல்போன்களை பறித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இந்த கும்பலிடம் 10 க்கும் மேற்பட்டோர் பணம், செல்போன்களை பறிகொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தான் தெப்பத் திருவிழா அன்று அதிகாலை நேரத்தில் கீரமங்கலம் மேற்கு செல்வராஜ் மகன் கண்ணதாசன் மற்றும் அவரது நண்பர்கள் ஆற்றுப் படுகையில் ஒதுங்கிய போது, அங்கு தயாராக நின்ற வழிப்பறி கும்பல் கண்ணதாசனை தலை, முகத்தில் பைக் பழைய செயின் பிராக்கெட் மூலம் தாக்கி, பீர் பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கண்ணதாசன், சத்தம் போட அவரது நண்பர்கள் ஓடி வந்த போது அவர்களையும் தாக்கிய கும்பல் ஒருவரின் 2 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்ணதாசனை மீட்டு அவரது நண்பர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு அவரது பெற்றோரும், உறவினர்களும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/05/pak3-2026-03-05-21-54-25.jpg)
அங்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து பாட்டில் ஓடுகள் மருத்துவர்கள் அகற்றி சிகிச்சை அளித்து வருகிறனர். மேலும் பாலையா மகன் மகேஷ் உள்பட சிலர் முதலுதவி சிகிச்சையுடன் வீடு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த தனிப்படை போலீசார், அந்தப் பகுதியில் தேடிய போது இந்த வழிப்பறி கும்பலின் தலைவனாக செயல்பட்ட அறந்தாங்கி, களப்பக்காடு என்.சி.ஓ காலனி கண்ணன் மகன் அருண்(26) அந்தப் பகுதியில் வைத்து போலீசார் பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து சில ஆயுதங்களை கைப்பற்றி தொடர்ந்து நடத்திய விசாரனையில் அவருடன் வந்தது அறந்தாங்கி கலப்பக்காடு ஜீவா நகர் சந்திரன் மகன் தீபக்(20), குரும்பக்காடு நாகராஜ் மகன் சப்தகிரிவாசன்(19), திருச்சி மண்ணச்சநல்லூர் கள்ளர் தெரு சம்பத் மகன் விஷ்ணு (எ) பொன்னிரஞ்சன்(27) மற்றும் கலப்பக்காடு, கூத்தாடிவயல், பஸ் டெப்போ ஏரியா பகுதிகளைச் சேர்ந்த 15, 16 வயது சிறுவர்கள் 4 பேர் என 8 பேரை கைது செய்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களாக உள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 12 செல்போன்கள், பல்வேறு ஆயுதங்களையும் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரனையில், அறந்தாங்கியில் எங்கள் பகுதியைச் சேர்ந்த சில கும்பல் இதே போல திருவிழாக்களிலும், தனியாக பைக்களில் செல்வோரையும் மறித்து அவர்களை தாக்கி பணம், நகை, செல்போன்களை பறித்து வருகின்றனர். அதுபற்றி அறிந்த நாங்களும் மது, கஞ்சாவுக்கு அடிமையாகி இருந்ததால் அதற்கான பணத் தேவைக்காக நாமலும் இது போல செய்யலாம் என்று தான் பைக் செயின் பிராக்கெட் பல்லை வாங்கி ஒரு பக்கம் துணி சுற்றி பிடித்துக் கொண்டு தனியாக வந்தவர்களை தலையில் முகத்தில் தாக்கி பணம், செல்போன்களை பறித்தோம். கடைசியாக வந்த கண்ணதாசனை அதே போல மிரட்டி பணத்தையும் செல்போனையும் கேட்க எதிர்த்து பேசியதால் பலமாக தாக்கினோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/05/pak2-2026-03-05-21-54-41.jpg)
பாட்டிலை உடைத்து குத்தினோம். அவருடன் வந்தவர்களையும் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த பொருட்களையும் பறித்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக ஓடி தப்பினோம். பணத்தை உடனே பிரிச்சு அங்கேயே பீர் வாங்கி குடிச்சுட்டோம். செல்போன்களை களப்பக்காடு என்.சி.ஓ காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுவனிடம் கொடுத்து வைத்திருந்தோம். எங்க பகுதியில இதே போல வேற கும்பலும் தீவிரமா செயல்படுறாங்க. அவங்க நாகுடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் சாலை என பல இடங்களிலும் சம்பவம் செய்து உள்ளனர். அவர்களைப் போல நாமலும் வரனும்னு ஆசைப்பட்டு தான் இப்படி செய்தோம் என்று கூறியுள்ளனர். கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் பணம், செல்போன், நகைகளை பறிகொடுத்தவர்கள் புகார் கொடுக்காமலேயே சென்றுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/03/05/pak1-2026-03-05-22-03-16.jpg)