ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் விபத்தில் இறந்தவரின் உடலை போலீஸ் அதிகாரி ஒருவர் தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், நாராயண்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயதான மொகுலையா என்ற இளைஞர். இவர் கோஸ்கி நகரில் உள்ள சிவாஜி சவுக் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மொகுலையா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, மொகுலையாவின் உடலை எடுத்துச் செல்ல அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த போலீஸ் ஒருவர், எலுமிச்சை பழம் விற்கும் தள்ளுவண்டியில் மொகுலையாவின் உடலை ஏற்றியுள்ளார். மேலும், தள்ளுவண்டியிலேயே மொகுலையாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.