police brutally hit tempo driver in bihar
வழிவிடாமல் இருந்ததற்காக டெம்போ ஓட்டுநரின் சாதியைக் கேட்டு போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை கொடூரமாகத் தாக்கி கீழே விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள மெஹுன் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான பிரத்யுமன் குமார். இவர் அந்த பகுதியில் பயணிகளை ஏற்றி இறக்கும் டெம்போ ஒன்றை ஓட்டி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், பயணிகளை இறக்கிவிட்டு பிரத்யுமன் குமார் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் புல்லட் பைக்கில் சாதாரண உடையில் வந்த போலீஸ் அதிகாரி பிரவீன் சந்திர திவாகர், வழி விடுமாறு பலமுறை ஹாரன் அடித்துள்ளார். ஆனால், பிரத்யுமன் வழிவிடுவதற்கு சிறிது தாமதமானதால், பிரவீன் சந்திர திவாகர் டெம்போவை முந்திச் சென்று நிறுத்தும்படி கூறியுள்ளார்.
அதன்படி டெம்போவை நிறுத்திய பிரத்யுமன் குமாரை, சாலையின் நடுவில் தடியால் அடித்துள்ளார். அதில் ஆத்திரம் குறையாத போலீஸ் அதிகாரி பிரவீன், பிரத்யுமனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரக்கமின்றி தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதற்கு தான் ஒரு பிராமணர் என்று கூறியபோது, ‘பிராமணர்கல் என் எதிரிகள்’ என்று கூறி அவரை மேலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, பிரத்யுமனை தரையில் விழ வைத்து மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரத்யுமனின் சாதியைக் கேட்டுள்ளார். இறுதியாக அவரை விடுவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பிரத்யுமன், போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், பிரவீன் சந்திர திவாகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், டெம்போ ஓட்டுநர் பிரத்யுமன், ரோந்து பணியில் இருந்த ஒரு பெண் காவலரை பார்த்து விசில் அடித்ததாகவும், இதனால் அவர் காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதாகவும் பிரவீன் சந்திர திவாகர் குற்றம் சாட்டியுள்ளார்.