போலீசார் மீது தாக்குதல்; சிறுவனை சுட்டு பிடித்த போலீசார்!

inves-1

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி என்ற பகுதியில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பாப்பாகுடி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தச் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது அங்கு மோதலில் ஈடுபட்டிருந்தவர்களை போலீசார் தடுக்க முயற்சித்தனர். அச்சமயத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் போலீசாரை அரிவாளால் விரட்டியுள்ளார்.  அதில் காவலர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது இத்தகைய சூழலில் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அப்போது அவர்களையும் அந்த சிறுவன் அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார். இதனால் காவல்துறையினர் அங்கிருந்து தப்பிச் சென்று அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து கதவைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அந்த சிறுவன் தொடர்ந்து கதவிலும் அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று கருதிய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கதவில் சுட்டு சிறுவனைப் பிடித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டின் போது சிறுவனுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. 

இதனையடுத்து சிறுவனை மீட்ட போலீசார் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சிறுவன் அரிவாளால் போலீசாரை (உதவி ஆய்வாளர் முருகன்) தாக்கியதில்  காயம் ஏற்பட்ட போலீசாரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரை அரிவாளால் வெட்டி தாக்க முயற்சித்த சிறுவனை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் திருநெல்வேலியில் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

children incident police sub Inspector Tirunelveli
இதையும் படியுங்கள்
Subscribe