சுதந்திர போராட்ட வீரரும், எமர்ஜென்சிக்கு எதிராக போராடியவருமான ஜெயபிரகாஷ் நாராயணனின் பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துவதற்காக வந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீசார் தடுத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்காக லக்னோவில் ஜெயபிரகாஷ் நாராயண் இன்டர்நேஷனல் சென்டர் (ஜெபிஎன்ஐசி) என்ற மையத்தை திறந்து வைத்தார். அதன் பின்பு, 2017ஆம் ஆண்டில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதன் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஜெயந்தி அவரது பிறந்தநாளான இன்று (11-10-25) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, லக்னோவில் ஜெபிஎன்ஐசி மையத்தில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயணன் சிலைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று உள்ளே நுழைய முயன்றார். அப்போது அவரை மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கேள்வி எழுப்பிய அகிலேஷ் யாதவ், “இந்த தகரத் தடைக்குப் பின்னால் அரசாங்கம் எதையோ மறைக்க முயற்சிக்கிறது. ஒரு சிறந்த தலைவரை கௌரவிப்பதை அவர்கள் ஏன் தடுக்கிறார்கள்?” என்று கூறினார். பாதுகாப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக ஜெபிஎன்ஐசி மையத்தின் வெளியே தடுப்பு போட்டுள்ளதாக போலீசார் விளக்கம் அளித்தனர். இருந்தபோதிலும் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் சிலர் போலீசார் பாதுகாப்பை மீறி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கடந்த ஆண்டும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளுக்கு ஜெபிஎன்ஐசி மையத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். ஆனால், முந்தைய நாள் இரவே அந்த மையத்திற்குள் யாரும் நுழையாதபடி, தகரத் தடுப்புகள் வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அகிலேஷ் யாதவ், இரவோடு இரவாகசம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இதனையடுத்து, உடனடியாக அங்கு வந்த சமாஜ்வாதி கட்சியினர் ஏராளமானோர் வந்து திரண்டதால், அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.