பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2016 ஆட்சி காலத்தின் போது முதல்வராக இருந்த நிதிஷ்குமார் பீகார் மாநிலம் முழுவதும் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். இது அப்போது பெரும் பேசுபொருளாக மாறியது. முதலில் இந்த மதுவிலக்குச் சட்டம் சமூகத்தில் மது பிரச்சினைகளைக் குறைக்கும் என்று கூறப்பட்டாலும், பின்னாளில் சட்டவிரோத உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்திருக்கிறது. அதில் ஆளும் கூட்டணி கட்சியின் முக்கிய புள்ளிகளே சட்டவிரோதமான மது விற்பனையை நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தின் கடுவதரி கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக பர்ஹத் காவல் நிலைய போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், உதவி ஆய்வாளர்கள் சுபம் ஜா மற்றும் உர்மிலா குமாரி தலைமையில் 8 போலீஸ்காரர்கள் அடங்கிய குழு, துப்பாக்கி மற்றும் லத்தியுடன் கிராமத்திற்கு விரைந்து சென்றது. போலீஸாரைக் கண்டவுடன், சட்டவிரோதமாக சாராயம் விற்கும் கும்பல் கத்தி, கூச்சலிட்டது. உடனே, சத்தம் கேட்டு நாலாபுறமிருந்தும் ஓடிவந்த கிராம மக்கள் போலீஸாரைச் சுற்றி வளைத்தனர். பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர், கம்பு, கற்கள், துடைப்பம் உள்ளிட்டவற்றால் சோதனை நடத்த வந்த போலீஸாரை சரமாரியாகத் தாக்கினர்.
கிராம மக்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், போலீஸார் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும், கிராம மக்கள் போலீஸாரைத் துண்டாக்காணும், துணியாக்காணும் என்று விரட்டி விரட்டித் தாக்கினர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், போலீஸார் கையில் துப்பாக்கி வைத்திருந்தும், கையெடுத்து கும்பிட்டு "எங்களை விட்டுவிடுங்கள்" என்று கெஞ்சி உயிர் தப்பினர். ஒரு சிலர், காவலர்களின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில், ஒரு பெண் உதவி ஆய்வாளர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். தப்பித்தோம், பிழைத்தோம் என்று 8 பேர் கொண்ட போலீஸ் குழு அங்கிருந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பியிருக்கிறது. படுகாயமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், 6 பெண்கள் உட்பட 13 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க, அந்தக் கிராம மக்கள் மதுபான உற்பத்தியைத் தங்களது பாரம்பரிய சடங்குகளில் ஒன்றாகவும், அது அவர்களின் அடையாளத்துடன் தொடர்புடையதாகவும் கருதுகின்றனர். ஆனால், பீகாரின் மதுவிலக்குச் சட்டத்தின்படி இது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. இதனால், போலீஸ் சோதனையை அவர்களின் கலாச்சாரத்திற்கு எதிரானதாகக் கருதி, கோபத்தில் கிராமவாசிகள் தாக்கியதாகக் அவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், ஜமுய் காவல் நிலைய அதிகாரி, "குற்றவாளிகளை விடுவிக்க மாட்டோம், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கைது செய்வோம்" என்று தெரிவித்தார். மேலும், கிராமத்தில் சோதனை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார்.
போலீஸாரைக் கண்டு சாராயம் விற்கும் கும்பல் தலைதெறிக்க ஓடுவார்கள் என்று பார்த்தால், பீகாரில் சாராயம் விற்கும் கும்பலை பார்த்து போலீசார் தலை தெறிக்க ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.