Advertisment

“தெரியாம பண்ணிட்டோம் ப்ரண்ட்ஸ்....”; 2கே கிட்ஸின் அட்டூழியம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

Untitled-1

நெய்வேலி அருகே திடீர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கத்தின் மகன் கார்த்திக். 25 வயதான கூலித் தொழிலாளியான கார்த்திக், விருத்தாச்சலம் நகரத்திற்குட்பட்ட பழமலைநாதர் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, அந்தப் பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், வேலை காரணமாக கடந்த 8-ஆம் தேதி இரவு, பழமலைநாதர் நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் தங்கியிருந்துள்ளார்.

Advertisment

அப்போது, 9-ஆம் தேதி அதிகாலையில், திருமண மண்டபத்திற்குள் மூன்று இளைஞர்கள் அத்துமீறி நுழைந்தனர். உடனே அவர்களைப் பார்த்து, "யார் நீங்கள்? எதற்கு இங்கு வந்தீர்கள்?" என்று கார்த்திக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று இளைஞர்களும் கார்த்திக்கை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இரண்டு இளைஞர்கள் கார்த்திக்கைப் பிடித்துக்கொள்ள, ஒருவர் முட்டிப்போட வைத்து கம்பி மற்றும் கட்டையால் தாக்கியல் தாக்கியிருக்கிறார்.

பின்னர், இந்தச் சம்பவத்தைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த அந்த மூன்று இளைஞர்களும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு, கெத்து காட்டியுள்ளனர். இதனிடையில், அவர்களிடமிருந்து தப்பித்த கார்த்திக், தனது உறவினர் வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி கதறி அழுதிருக்கிறார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய உறவினர்கள், இதுகுறித்து விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையறிந்த அந்த மூன்று இளைஞர்களும், கார்த்திக்கைத் தாக்குவதற்காக அவர் சென்ற ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்து சென்று, மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்குள் அவர்கள் அனுமதிக்கப்படாததால், அருகில் இருந்த பெட்டிக்கடையை அடித்து நொறுக்கினர். இதனைத் தட்டிக்கேட்ட கடையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

Advertisment

பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்ற இளைஞர்கள், விருத்தாச்சலம் ரயில்வே மேம்பாலம் அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த அரசு பேருந்தை வழிமறித்தனர். பின்னர், பேருந்தின் ஓட்டுநர் கணேசன் மற்றும் நடத்துநர் தென்னரசு ஆகிய இருவரையும் மூன்று இளைஞர்கள் தாக்கினர். அத்துடன், கையில் வைத்திருந்த மது பாட்டிலால் ஓட்டுநர் கணேசனின் தலையில் அடித்து மண்டையை உடைத்துவிட்டு, மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த ஓட்டுநரைப் பயணிகள் மீட்டு, உடனடியாக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க, மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரும் பழமலைநாதர் நகர் பகுதியைச் சேர்ந்த காமராஜரின் மகன் கந்தவேல் (21), முருகனின் மகன் விக்னேஷ்(எ) சிவா (22), மற்றும் பாலாஜி (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ரகளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மூவரும், விருத்தாச்சலம் அடுத்த கன்னியாக்குப்பம் முந்திரி தோப்பில் பதுங்கியிருப்பதாக, காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூன்று வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது, கந்தவேல், காவலர்கள் வேல்முருகன், வீரமணி ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

அதனால், சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு, தனது துப்பாக்கியை எடுத்து, தப்பியோட முயன்ற கந்தவேலின் காலில் சுட்டு பிடித்தார். மேலும், மற்றொரு நபரான விக்னேஷ், தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில், பாலாஜி என்ற இளைஞர் மட்டும் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். அதன்பின்னர், காயமடைந்த இருவரையும் போலீசார் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மூன்று பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய பாலாஜியைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், தப்பியோடிய பாலாஜி, ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், "ஹலோ பிரண்ட்ஸ், விருத்தாச்சலத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் பார்த்திருப்பீர்கள். அவங்க வேற யாரும் இல்லை, என் பிரண்ட்ஸ்தான். இன்ஸ்டாகிராமில் வைரலாவதற்காக, மண்டபத்தில் இருந்த ஒரு அண்ணனை நாங்க தாக்கி, வீடியோ எடுத்தோம், பிரண்ட்ஸ். அதன்பிறகு, அந்த அண்ணன் எங்களிடமிருந்து தப்பித்து, மருத்துவமனைக்குச் சென்றார். நாங்களும் அங்கு சென்றோம். உள்ளே அனுமதிக்காததால், அருகே இருந்த கடையை அடித்து, அங்கிருந்த இரண்டு பேரைத் தாக்கினோம். அதன்பிறகு, அரசு பேருந்து ஓட்டுநர் அண்ணனையும், நடத்துநர் அண்ணனையும் போட்டு அடித்து, மண்டையை உடைத்துவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டோம். அதன்பிறகு, நாங்க பதுங்கியிருந்த இடத்துக்கு வந்த போலீசை, கந்தவேல் வெட்டிவிட்டு, தப்பிக்கப் பார்த்தான். ஆனால், போலீசு அவனைச் சுட்டுப் பிடித்துவிட்டது. இன்னொருத்தவன் தடுக்கி விழுந்துட்டான். நான் அங்கிருந்து தப்பிச்சு ஓடிவந்துட்டேன்  பிரண்ட்ஸ். நான் இப்போ விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் சரணடையப் போறேன். நீங்க யாரும் இப்படி செய்யாதீங்க  பிரண்ட்ஸ். இன்ஸ்டாகிராமில் வைரலாகறதுக்காக நாங்க பண்ண தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன் பிரண்ட்ஸ்," என்று கதறியிருக்கிறார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் வைரலாவதற்காக மூன்று இளைஞர்கள் செய்த அட்டகாசமும், அட்டூழியங்களும், விருத்தாச்சலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

police men instagram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe