சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பாக இன்று (26-12-25) போராட்டம் நடத்தினர். இடைநிலை ஆசிரியர்களிடம் உள்ள ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் எனவும் 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கொடுத்த 311வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

Advertisment

இந்த போராட்டத்தின் போது 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகத்தை ஒரே நேரத்தில் முற்றுகையிட முயன்றனர். அப்போது பாதுகாப்பில் இருந்த போலீசார், போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால் ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார், குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து பேருந்தில் ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.