Advertisment

பகலில் அச்சக அதிபர்கள், இரவில் கொள்ளையர்கள்; இணைந்த கைகளுக்கு விலங்கிட்ட காவல்துறை!

pre

police arrested Printing press owners by day, robbers by night who theft house

சிவகாசி, திருப்பதி நகரில் வசிக்கும் தனியார் பள்ளித் தாளாளர் செல்லப்பாண்டியன் என்பவரின் வீட்டின் முன்பக்க ஜன்னல் கம்பியை இயந்திரத்தால் அறுத்து வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள், தாங்கள் எதிர்பார்த்த அளவு வீட்டில் தங்க நகை, பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். இதே பாணியில், கடந்த சில வருடங்களாக சிவகாசி மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள பல்வேறு வீடுகள் மற்றும் நிறுவனங்களின் இரும்பு ஜன்னல் கம்பிகளை அறுத்து சுமார் 100- பவுன் தங்க நகைகளுடன், ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பணம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்கள் காவல்துறையின் பிடியில் சிக்காமல் தப்பி வந்தனர்.

Advertisment

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் அனைத்தும் ஒரே மாதிரி நடந்திருந்ததால், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது ஒரே கும்பலாக இருக்குமோ எனச் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், கொள்ளை முயற்சி நடந்த செல்லப்பாண்டியன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளில் தனிக்கவனம் செலுத்தி ஆய்வு செய்தனர். தனிப்படை காவல்துறையினரின் விசாரணைப் பொறியில், சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட நமஸ்கரித்தான் பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த தங்கேஸ்வரன் (34) மற்றும் திருத்தங்கல் வடக்குரத வீதியில் வசிக்கும் செல்வக்குமார் (32) ஆகிய இருவரும் சிக்கினர். இவ்விருவரையும் கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும்  
தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisment

இதற்குமுன் தங்கேஸ்வரன் கேரளாவிலுள்ள அச்சகத்தில் வேலை செய்தபோது அங்கும் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு காவல்துறையினர் வலையில் சிக்காமல் தப்பி வந்துள்ளார். பின்பு,  சொந்த கிராமமான நமஸ்கரித்தான்பட்டிக்குத் திரும்பிய தங்கேஸ்வரன், சிவகாசியிலுள்ள அச்சகங்களில் வேலை பார்த்தபோது செல்வக்குமாருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தனது கேரள அனுபவத்தை தங்கேஸ்வரன், செல்வக்குமாருடன் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இருவரும் கைகோர்த்து சிவகாசி சுற்று வட்டார நகர்ப்புறம் மற்றும் கிராமப் பகுதிகளில், பகல் நேரங்களில் அச்சகப் பணிகளில் ஈடுபட்டு, ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டதுடன் இரவு நேரத்தில் அந்த வீடுகளிலும், தாங்கள் வேலை பார்த்த நிறுவனங்களிலும் இரும்புக் கம்பி ஜன்னல்களை இயந்திரம் மூலமாக அறுத்து உள்ளே சென்று, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கொள்ளையடித்த தங்க நகைகளை தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்களில் வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் அடகு வைத்ததுடன், கொள்ளையடித்த லட்சக்கணக்கான ரூபாயை வைத்து டூ ஹேன்ட்ஸ் என்ற பெயரில் சொந்தமாக அச்சகமும் தொடங்கி நடத்தி வந்தனர். ஒரு கொள்ளைச் சம்பவம் நடத்தி அதன்பின் சில மாதங்கள் இடைவெளி விட்டு இடைப்பட்ட காலத்தில் அச்சக அதிபர், அச்சகப் பணி என தங்களது நிலையை தங்கேஸ்வரனும் செல்வக்குமாரும் உயர்த்திக்கொண்டதால், காவல்துறையினர் உள்பட பொதுமக்கள் யாருக்குமே இவர்கள் இருவர் மீதும் சந்தேகம் எழவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவரும் பகலில் அச்சகப்பணி, இரவில் கொள்ளைப் பணி என 24 மணி நேரமும் செயல்பட்டு வந்துள்ளனர்.  

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் வங்கியில் அடமானத்திலிருக்கும் 24 பவுன் தங்க நகை உள்பட 64 பவுன் தங்க நகைகளை மீட்ட காவல்துறையினர், அவர்களிடமிருந்து கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், இரும்பு ஜன்னல் கம்பிகளை அறுக்கப் பயன்படுத்திய இயந்திரம், கையுறை போன்ற உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருத்தங்கல் காவல்துறையினர், இருவரையும் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர்கிளைச் சிறையிலடைத்தனர். சிறையிலுள்ள அச்சக அதிபர்களான கொள்ளையர்கள் தங்கேஸ்வரனும் செல்வகுமாரும், அரங்கேற்றிய கொள்ளைச் சம்பவங்களில் வேறு யாரேனும் அவர்களுக்கு  உதவி செய்து தொடர்பில் இருந்துள்ளார்களா? தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இவர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனரா? என்பது போன்ற பல கட்ட விசாரணைகளில் தனிப்படை  காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.    

police Sivakasi Theft
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe