கடலூர் மத்திய சிறையிலிருந்து ஜாமனில் வெளியே வந்த பிரபல ரவுடியை, சில நிமிடங்களிலேயே மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணபிரான் பாண்டியன். இவர், தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் கத்தியை காட்டி வழிபறி செய்ததாகக் கூறி கண்ணபிரான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருடைய உயிருக்கு ஆபத்து என்ற தகவல் வந்ததை தொடர்ந்து அவர் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். 

Advertisment

இந்த நிலையில், அந்த வழக்கில் அவருக்கு நேற்று ஜாமீன் கிடைத்து இன்று சிறையில் இருந்து வெளியே வருவதாக இருந்தது. அதனால், அவரை வரவேற்க அவருடைய ஆதரவாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வெளியே கூடி காத்திருந்தனர். அதனை தொடர்ந்து, கண்ணபிரான் சிறையில் இருந்து வெளியே வந்தார். அந்த நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் போலீசார் கடலூர் மத்திய சிறைக்கு வந்தனர். தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் ஏழாவது குற்றவாளியாக கண்ணபிரான் சேர்க்கப்பட்டு அந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக போலீசார் அங்கு வந்தனர்.

இதனையறிந்த கண்ணபிரானின் ஆதரவாளர்கள், அவரை கைது செய்யக் கூடாது என்று தச்சநல்லூர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவரை கைது செய்தே ஆக வேண்டும் என்று கூறி அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது ஆதரவாளர்கள், கண்ணபிரானை போலீஸ் வாகனத்தில் ஏற்றவிடாமல் தடுக்க முயன்றனர். அதன் பின்னர், அவரை பாதுகாப்பாக போலீசார் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். ஆனால், அங்கிருந்து விருதாச்சலம் செல்லும் வரை அவருடைய ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை பின் தொடர்ந்தே வந்துள்ளனர்.

Advertisment

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரினர். அதனை தொடர்ந்து, கடலூர் மாவட்ட போலீசார் தச்சநல்லூர் போலீசாருக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்தனர். அதனால் கண்ணபிரான் கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டார்.