வடமாநிலங்களில் இருந்து சென்னை, நாகப்பட்டினம், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரையில் இருந்து படகுகள் மூலமாக இலங்கைக்கு கடத்துவது வழக்கமாக உள்ளது. இதனை கண்காணித்து போலீசார் பிடித்து வருகின்றனர்.

Advertisment

இதனிடையே, நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஒரு கும்பல் போதை மாத்திரைகளை கடத்திச் செல்வதாக திருச்சியில் உள்ள ஒரு உளவு அமைப்பிற்கு தகவல் கிடைக்க, சில நாட்களாக சம்மந்தப்பட்ட மாத்திரை கடத்தல் கும்பலை தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட போலீசாருடன் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் உளவுத்துறையின் தகவல்படி, நாகப்பட்டினத்தில் இருந்து அந்தக் கும்பல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் செல்வதை அறிந்த தனிப்படை போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் வரும் போது தயாராக இருந்த தனிப்படை போலீசார், குறிப்பிட்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள போதைக்காக பயன்படுத்தும் சுமார் 10 லட்சம் மாத்திரை பண்டலை கைப்பற்றினர். மேலும், காரில் இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், அமல்ராஜ், பிரதீப், சந்தியா ஆகிய 4 பேரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் அவர்களிடம் இருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரனையில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடத்தி வந்த மாத்திரைகளை நாகப்பட்டினத்தில் இருந்து தங்கள் டீம் கொண்டு வந்து ராமநாதபுரத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட இருந்ததாக கூறியுள்ளனர். இலங்கைக்கு கடத்த இருந்த போதை மாத்திரைகளையும் கடத்தல் கும்பலையும் கண்காணித்து தகவல் சொன்ன உளவுத்துறையினரையும் கடத்தல் கும்பலை பிடித்த தனிப்படை போலீசாரையும் காவல் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Advertisment