Advertisment

இலங்கைக்குக் கஞ்சா கடத்தல்; கடற்கரைக்கு நுழையும் முன் மடக்கிப் பிடித்த போலீஸ்!

103

வேலூர், ஆந்திராவில் இருந்து தடையின்றி கிடைக்கும் கஞ்சா, பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து, கிழக்கு கடற்கரை வழியாக இலங்கைக்கு படகுகளில் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இத்தகைய கடத்தல்களைத் தடுக்க தமிழக காவல்துறை மேற்கொள்ளும் முயற்சிகளையும் மீறி, கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், ஆந்திராவில் இருந்து நிலநிற காரில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா மூட்டைகளுடன் சென்னை வழியாக திருச்சி சென்று, தஞ்சை சாலையில் பயணித்து, கிராமப்புற சாலைகள் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை நோக்கி கிழக்கு கடற்கரைக்கு செல்வதாக சிறப்பு உளவுப் பிரிவினர் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, எஸ்.பி. ராஜாராம், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் மூலம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisment

இதன்படி, திருச்சிற்றம்பலம் காவல் சரகத்தில் கட்டையன்காடு அருகே சென்ற காரை வழிமறித்த திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் அலாவுதீன் தலைமையிலான காவல்துறையினர், காரில் சோதனை செய்தபோது 7 மூட்டைகளில் 110 கஞ்சா பண்டல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றின் மொத்த எடை 220 கிலோ ஆகும். கஞ்சா மூட்டைகளை கைப்பற்றிய காவல்துறையினர், காரில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் திருமலைகொழுந்தபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் முத்துமாலை (21) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஜோதிங்கநல்லூரைச் சேர்ந்த சுந்தரத்தின் மகன் சீனிவாசபெருமாள் (25) ஆகியோரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், “சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பாலா என்பவருக்காக, அவர் கூறியபடி இந்தப் பண்டல்களை கொண்டு வந்தோம். இது கிழக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கொண்டு செல்லப்படவிருந்தன. இங்கு வேறொரு நபர் வந்து பெற்றுக்கொள்வார் என்று பாலா கூறினார், ஆனால் அவர் இன்னும் வரவில்லை. அதற்குள் சிக்கிக் கொண்டோம்,” என்றனர். மேலும், குறிப்பிட்ட நபர் வந்திருந்தால், கண்காணிப்பு குறைவாக உள்ள கடற்கரைப் பகுதிக்கு கஞ்சா மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டு, இரவில் மீனவர்கள் கடலுக்கு புறப்படும் நேரத்தில் கஞ்சா ஏற்றப்பட்ட படகு கிளம்பி, நடுக்கடலில் இலங்கை படகு வந்து பண்டல்களை மாற்றிக்கொண்டு சென்றிருக்கும் என்று தெரிவித்தனர்.

இந்தக் கஞ்சா கடத்தல் சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சரியான தகவல் அளித்து கஞ்சா பண்டல்கள் கைப்பற்றப்படுவதற்கு காரணமாக இருந்த உளவுப் பிரிவு காவல்துறையினரை எஸ்.பி. பாராட்டியுள்ளார்.

Cannabis police srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe