police arrested 5 member an massacre incident at police quarters in trichy
திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் சென்ற இளைஞர் ஒருவரை, ஒரு மர்ம கும்பல் விரட்டியுள்ளது. உயிர் பயத்தில் ஓடிய அந்த இளைஞர், அருகே உள்ள புதிய காவலர் குடியிருப்பில் உள்ளே நுழைந்துள்ளார். விடாமல் இளைஞரை பின் தொடர்ந்து காவலர் குடியிருப்புக்கு உள்ளே சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல், கொலை வெறிதாக்குதல் நடத்தியது. இதில் அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர் திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 25) என்பதும், இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திருந்த நிலையில் திருச்சி மாநகரில் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்புக்கு உள்ளே புகுந்து இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இளைஞரை கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வந்த போலீசார், தற்போது அவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் கலெக்ஷன் ஏஜெண்ட்டாக பணியாற்றி வந்த தாமரைச் செல்வனுக்கும், எசனக்கோரை கிராமத்தைச் சேர்ந்த சதீஷுக்கும் இடையே கமிஷன் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சதீஷை, தாமரைச் செல்வன் அடித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து சதீஷ், தனது நண்பர்களான பிரபாகரன், கணேஷ், நந்து, இளமாறன் ஆகியோருடன் சேர்ந்து தாமரைச் செல்வனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாமரைச் செல்வனை, 5 பேரும் வழிமறித்து தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய தாமரைச் செல்வன், மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பில் உள்ள உதவி ஆய்வாளர் செல்வராஜ் வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளார். ஆனாலும் அவரை விரட்டி வந்த 5 பேர், அங்கு சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். அப்போது, தாமரைச் செல்வனின் அலறல் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த காவலர்கள், இளமாறனை மட்டும் சுற்றி வளைத்து பிடித்தனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடிய 4 பேரையும் பாலக்கரை போலீசார், கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us