கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான சகுந்தலா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி, குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால், சகுந்தலா தனியாக வீட்டில் வசித்து, கூலி வேலை செய்து வந்தார்.

Advertisment

இந்நிலையில், ஆகஸ்ட் 22, 2025 அன்று, வேலைக்குச் சென்றுவிட்டு மதிய உணவு இடைவேளையின்போது சகுந்தலா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது, அருகில் வசிக்கும் ரஞ்சித் குமார் என்ற இளைஞர், கஞ்சா மற்றும் மது போதையில் இருந்தபோது, வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சகுந்தலா மீது திடீரென கல்லால் தாக்கினார். மேலும், அவரது தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்தார். இதில், தலை நசுங்கிய சகுந்தலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அன்னூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகுந்தலாவின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், குற்றவாளியான ரஞ்சித் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ரஞ்சித் குமார், சகுந்தலாவைத் தாக்குவதற்கு முன்பு, கஞ்சா போதையில் அப்பகுதியில் மேலும் சிலரைத் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரைப் பிடித்து கட்டிவைத்து தாக்கினர். பின்னர், அங்கு வந்த காவல்துறையினரிடம், கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுவதால் இதுபோன்ற குற்றங்கள் நிகழ்வதாகவும், காவல்துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.