கிருஷ்ணகிரி ஜெக்கப்பா நகர் பகுதியில் உள்ள மூன்றாவது தெருவில் வசிப்பவர் கலைச்செல்வி. இவர், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கலைச்செல்வி வழக்கம்போல் தனது பேரக்குழந்தைகளைப் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிடுவதற்காக அழைத்துச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர் ஒருவர், கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் பறந்து சென்றார். அதன்பிறகு, கலைச்செல்வி கூச்சலிட்டுக்கொண்டே அந்த ஸ்கூட்டியைத் துரத்திக் கொண்டே சென்றார். ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கலைச்செல்வி கிருஷ்ணகிரி டவுன் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், விரைந்து செயல்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும், அந்தப் பகுதியில் சோதனை நடத்தியபோது, தங்க சங்கிலியின் ஒரு சவரன் நகையின் ஒரு பகுதி மட்டும் கீழே கிடைத்தது. மீதி ஒன்றரை சவரன் நகையை அந்த மர்ம நபர் திருடிச் சென்றிருந்த நிலையில், ஸ்கூட்டி சென்ற வழித்தடத்தை போலீசார் பின்தொடர்ந்தனர்.
இதையடுத்து, ஆந்திர மாநிலம் குப்பம் சாலையில் ஸ்கூட்டியில் சென்றுக் கொண்டிருந்த அந்த நபரை, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் ஆனந்த்பூரைச் சேர்ந்த ஜெயதிஸ்வர சுதர்சன குமார் என்பது தெரியவந்தது. மேலும், அவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஒன்றரை சவரன் தங்க சங்கிலியையும் பறிமுதல் செய்தனர். அத்துடன், காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து, வேறு எந்தத் திருட்டு சம்பவத்திலாவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த 30 நிமிடத்தில் நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு திருடனை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பிடித்த சம்பவம், மக்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டைப் பெற்று வருகிறது.