திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் 29 வயதான ஆமு என்ற ரபீக் ராஜா. இவர் மீது திருட்டு, கொள்ளை, கஞ்சா விற்பனை, பொது சொத்துகளைச் சேதப்படுத்துதல், வழிப்பறி தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஆகஸ்ட் 19 ஆம் தேதி மதியம் இவர் நத்தம் பேருந்து நிலையத்தில் கையில் நீண்ட அரிவாளுடன் தரையில் உரசியபடி உலாவந்திருக்கிறார்.
தொடர்ந்து, குட்டூரைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி, தங்க மோதிரத்தைப் பறித்துக்கொண்டு சென்ற ஆமு ரபீக் ராஜா, பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்காரர்களையும் மிரட்டியிருக்கிறார். இதைப் பார்த்த கடைக்காரர்கள் கடைகளை அடைத்துவிட்டு ஓடியுள்ளனர். மேலும், மாலை நேரம் என்பதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடியிருந்த நேரத்தில், பேருந்து நிலையத்தில் நீண்ட அரிவாளுடன் நடமாடிய ரபீக் ராஜாவைப் பார்த்து, பொதுமக்கள் பயத்தில் அங்கும் இங்குமாகச் சிதறி ஓடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. மேலும், இச்சம்பவம் குறித்து நந்தகுமார் என்பவர் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தர்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த நத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீசார், பேருந்து நிலையத்தில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த ரபீக் ராஜாவைச் சுற்றி வளைத்துப் பிடித்து, அவரிடமிருந்து அரிவாளைக் கைப்பற்றினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நத்தம் போலீசார், அவரைக் கைது செய்து நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, நீதிமன்றத்திலும் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால், நத்தம் பேருந்து நிலையப் பகுதியில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
மேலும், ரபீக் ராஜா, இன்ஸ்டாகிராமில் கச்சாநத்தத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சுள்ளான் அகிலனின் வீடியோக்களைப் பார்த்து, அதேபோல் தானும் ரவுடியாக வேண்டும் என மாஸாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். அதில், மது பாட்டில்களுடன், காவல் நிலையத்திலும், சிறையிலும் சென்று வீடியோக்களைப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் தான் பெரிய ரவுடி எனக் காட்டிக்கொள்ள நினைத்து, பந்தா காட்டியவருக்கு, காவல்துறையின் சிறப்பு கவனிப்புக்குப் பின், தற்போது கம்பி எண்ணும் நிலை ஏற்பட்டிருக்கிறது.