சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் இன்று (19-01-26) 25வது நாளாக போராடிய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பாரிமுனையில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

Advertisment

கடந்த 2009 ம் ஆண்டு மே 31 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.8370  ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் ஜூன் 1 முதல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இரண்டு நியமனத்திற்கும் இடையில் அடிப்படை ஊதியத்தில் வித்தியாசம் ரூ.3170 ஆக இருந்தது. அந்த வித்தியாசம் தற்போது 16,000 ரூபாய் வரை மாறியுள்ளது. இரண்டு நியமனங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் வேலை மற்றும் தகுதி போன்றவை ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில், ஊதியத்தில் மட்டும் எதற்காக இந்த வித்தியாசம் என ஏற்கனவே பல குரல்கள் எழுந்தன. 

இந்த வேறுபாட்டை களைய கடந்த அதிமுக ஆட்சியில், இடைநிலை ஆசிரியர்களால் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சியான திமுக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சம வேலைக்கு சம ஊதியம் அளிக்கப்படும் என உறுதியளித்தது. திமுக ஆட்சிக்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment