மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் மும்பையில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவர் மராத்தி மொழி பேச தெரியாது என்று சொன்னதால், நவநிர்மாண் சேனா கட்சியினர் அவரின் கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினர். அதே போல், வங்கி பணப்பரிவர்த்தனைகளில் மராத்தி மொழி பயன்படுத்தாததால் வங்கி ஊழியர் ஒருவர் மீது, நவநிர்மண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு தொடர்ந்து மொழி தொடர்பான சர்ச்சை நிகழ்ந்து வருகிறது.
மொழி தொடர்பான சர்ச்சை அம்மாநிலத்தில் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி மராத்தி பேசாததால் பயந்தர் பகுதி இனிப்புக் கடைக்காரர் ஒருவரை நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக தாக்குதல் நடத்திய நவநிர்மாண் சேனா கட்சியினர் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு தண்டனையின்றி விடுவிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பயந்தர் பகுதியில் உள்ள வணிகர்கள், கடை உரிமையாளரைத் தாக்கிய நவநிர்மாண் சேனா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினர்.
இந்த நிலையில், வணிகர்கள் நடத்திய போராட்டத்தை எதிர்கொள்ள இன்று (08-07-25) காலை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சியினர் தானே பகுதியில் பேரணி நடத்த திட்டமிட்டனர். ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்காத போதிலும் நவநிர்மாண் சேனா கட்சியினர் தானேவில் இருந்து மும்பைக்கு பேரணியாக செல்லத் திட்டமிட்டு இன்று காலையில் பெருந்திரளாக கூட்டம் கூடினர். ஆனால், அனுமதியின்றி வீதிகளில் கூடியதால் நவநிர்மாண் சேனா கட்சியினரை, போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது, மகாராஷ்டிராவில் வசிக்கும் எவரும் மராத்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கற்றுக்கொள்ளாதவர்கள் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்களில் பலர் கூறினர். மீரா பயந்தர் பகுதியில் இந்த சம்பவம், மாவட்டத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு பதற்றம் அதிகரித்துள்ளது.