விருதுநகர் ராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட சேத்தூர் பகுதியில் உள்ள ஐந்து கடை பஜார் பகுதியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்பனை, கஞ்சா பழக்கம் உடைய சில சமூக விரோதிகளால் அப்பகுதி மக்கள் பல்வேறு தொந்தரவுகளை அனுபவித்து வந்துள்ளனர். இவர்களது அராஜகத்தைத் தட்டிக் கேட்கும் பொதுமக்களைத் தாக்குவது, அவர்களது வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களைச் சேதப்படுத்துவது, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது போன்ற சமூக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், கடந்த தீபாவளி தினத்தன்று அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் வெடி வெடித்துக் கொண்டாடியுள்ளனர். இதனை அடுத்து அங்கு அமர்ந்திருந்த கஞ்சா மற்றும் போதை கும்பல் சிறுவர்களை வெடி வெடிக்க விடாமல் அடித்து அனுப்பியுள்ளனர்.

Advertisment

இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் சமூக விரோதச் செயலில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்து மறுநாள் விடுவித்துள்ளனர். காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த சமூக விரோத நபர்கள், 20க்கும் மேற்பட்ட தனது கூட்டாளிகளை உடன் சேர்த்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்த அப்பகுதியைச் சேர்ந்த சமுத்திரம், சூர்யா, குட்டி பிரகாஷ், தினேஷ், வினோத் ஆகிய ஐந்து பேரது வீடுகளுக்குள் புகுந்து அவர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும், அவர்களது வீடுகளையும் சேதப்படுத்தியது மட்டுமின்றி, அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் ஆகியவற்றை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தித் தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில், புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் கஞ்சா மற்றும் மது போதையின் காரணமாக தொந்தரவு அதிகரித்து வருவதால் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வெட்டுப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காலை 7 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மறுத்து பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனால் பதட்டமான சூழல் ஏற்படவே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். சிலர் கைதாக மறுத்து காவல்துறையினரைத் தள்ளிவிட்டுத் தப்ப முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இருபதுக்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்து சேத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.