சமூக ஊடகங்கள் இன்று உலகளாவிய தகவல் பரிமாற்றத்தின் முக்கிய கருவியாக விளங்குகின்றன. ஆனால், இந்த தளங்கள் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தப்படும்போது, சமூகத்தில் பெரும் சர்ச்சைகளையும், சட்டரீதியான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு யூடியூபர், பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக முகமூடி அணிந்து வெளியிட்ட வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி, பொதுமக்களிடையே கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், "பெண் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதால் பெற்றோர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை ஆணா? பெண்ணா? ஸ்கேன் மூலம் கண்டறியும் உரிமையை பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும்" என்று வீடியோவில் பேசியிருந்தார். இந்த வீடியோ விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எனக் கண்டறிவது, பெண் குழந்தையாக இருந்தால் அதைக் கலைக்கும் கருக்கொலைகள் ஆகியவற்றைத் தடுக்க, எம்.டி.பி. ஆக்ட் எனப்படும் கருக்கலைப்பு தடுப்பு சட்டம் உள்ளது. இச்சட்டத்தின்படி, பாலினத்தைக் கண்டறிந்து சொல்பவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.
மருத்துவர்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டால் சிறைத் தண்டனையோடு அவர்கள் மருத்துவத் தொழிலையே தொடர முடியாத அளவுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள் இருந்துகொண்டிருக்கும் சூழலில், பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் நீட்சியாக, தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்தின் உத்தரவின் பேரில் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக முகமூடி அணிந்து வீடியோ வெளியிட்டவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த திலீபன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திலீபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி. அரவிந்த் கூறும்போது, "பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகப் பேசிய யூடியூபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம். அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வீடியோக்களை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தென்காசி மாவட்டத்தில் இனிமேல் யார் இப்படி பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகப் பேசினாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்" என தெரிவித்தார்.