Advertisment

பாழித்தீர்க்க படையுடன் இறங்கிய கும்பல்; படுகொலையைத் தடுத்து நிறுத்திய ஒற்றை ஃபோன் கால்!

Untitled-1

கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்திற்கு கடந்த 7-ம் தேதி மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், “சார், சீக்கிரம் வாங்க! இங்கே புது பஸ் ஸ்டாண்ட் பக்கமுள்ள ஏரிக்கரை பகுதியில் யாரோ ஒருவரை மூன்று, நான்கு பேர் சேர்ந்து கையில் அரிவாளுடன் வெட்டுவதற்குத் துரத்திக் கொண்டுள்ளனர்” என்று கூறினர். உடனடியாக கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அங்கு பார்த்தபோது, அங்கிருந்தவர்கள் கைகளில் அரிவாளுடனும், பெட்ரோல் கேனுடனும் இருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். மேலும், அங்கு பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின்னுக்கு முரணாகப் பேசியதால், அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தென்காசி மாவட்டம், மேலநீலித நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலியப்பன். அதிமுக பிரமுகரான இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலை, நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான பாலமுருகன், முத்துராஜ் உள்ளிட்ட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர். அதில் முத்துராஜ் என்பவர் சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு, ஆலந்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலைப் பார்த்து வந்துள்ளார்.

Advertisment

ஒரு மாதம் நிபந்தனை ஜாமின் கையெழுத்து போட்டு முடித்த பின்பும், ஊருக்குப் போனால் பிரச்சினை ஏற்படும் என நினைத்த முத்துராஜ், சென்னையில் டாஸ்மாக் பாரிலேயே வேலைப் பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட வேலியப்பனின் அண்ணன் பொன்னுபாண்டி என்பவரின் மகனான 26 வயது கார்த்திக் என்பவர், ‘சித்தப்பா வேலியப்பனைக் கொலை செய்தவர்களைத் தீர்த்துக் கட்டினால் தான் நாம் மீண்டும் இந்த ஊரில் கெத்தாக இருக்க முடியும்’ என்று நினைத்து, கற்படம் கிராமத்தைச் சேர்ந்த  20  வயதான கார்த்திக்ராஜ் என்பவரிடம், “எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. என் சித்தப்பாவைக் கொலை செய்தவர்களைத் தீர்த்துக் கட்ட வேண்டும். ஆட்கள் இருந்தால் அழைத்து வா” என்று கூறியிருக்கிறார்.

1
முத்துராஜ் - கார்த்திக்

உடனே, கார்த்திக்ராஜ், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சூரியமினிக்கன் பகுதியைச் சேர்ந்த 22 வயதான கணேசன், கோவில்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சூர்யா, கோவில்பட்டி சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான கார்த்திகேயன் உள்ளிட்டோரை அழைத்து வந்து கார்த்திக்கின் முன் நிறுத்தியிருக்கிறார். பின்னர், கூடிப் பேசிய அவர்கள், சென்னையில் டாஸ்மாக் பாரில் வேலை செய்யும் முத்துராஜை முதலில் போட்டுத் தள்ளுவது என்று தீர்மானித்துள்ளனர்.

அதற்காக 15 லட்சம் பேசப்பட்டு, 10 லட்சம் ரூபாய் கொடுப்பதாக முடிவாகியுள்ளது. மேலும், போக்குவரத்து மற்றும் இதர அனைத்து செலவுகளையும் தானே உடன் இருந்து செய்வதாகவும், வேலை முடிந்த பிறகு பணத்தைக் கொடுப்பதாகவும் பேசி, கார்த்திக் ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள முத்துராஜைத் தேடி, காரில் அரிவாளுடன் கூலிப்படையைச் சேர்ந்த கார்த்திக்ராஜ், கணேசன், சூர்யா, கார்த்திகேயன் ஆகியோருடன் வேலியப்பனின் அண்ணன் மகனான கார்த்திக்கும் சென்றுள்ளார்.

இதனை எப்படியோ அறிந்த முத்துராஜ், கிருஷ்ணகிரியில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த நிலையில், இரண்டு மாதங்களாக முத்துராஜ் இருக்கும் இடத்தைத் தேடி அலைந்த அந்தக் கும்பல், எப்படியோ கிருஷ்ணகிரியில் இருப்பதை அறிந்து கொண்டு, கடந்த 7-ம் தேதி கிருஷ்ணகிரி வந்துள்ளனர். அன்று மாலை, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி, மது அருந்திவிட்டு, முத்துராஜைக் கொலை செய்ய பக்காவாகப் பிளான் போட்டு, 8-ம் தேதி காலை முதலே அவரைப் பின்தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், மாலை 5 மணியளவில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை பகுதிக்கு வந்த முத்துராஜை, கத்தியால் சரமாரியாக வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முடிவு செய்த அந்தக் கும்பல், கத்திகளையும், பெட்ரோல் கேனையும் எடுத்துக் கொண்டு முத்துராஜைத் தாக்க முயன்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்துராஜ் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதற்கிடையில், அங்கிருந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களைப் பிடித்தும், முத்துராஜை மீட்டும் வந்துள்ளனர். இதையெடுத்து, கார்த்திக், கார்த்திக்ராஜ், கணேசன், சூர்யா, கார்த்திகேயன் உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

தென்காசியில் நடந்த கொலைக்கு ஒரு வருடம் கழித்து, பழி தீர்க்கும் விதமாக, கூலிப்படைகளுக்கு பணத்தைக் கொடுத்து, 500 கி.மீ.க்கு மேல் காரில் ஆயுதங்களுடன், காவல்துறையின் பல சோதனைச் சாவடிகளைக் கடந்து அழைத்து வந்து கொலை செய்ய முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police admk Krishnagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe