நெய்வேலி அருகே திடீர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கார்த்திக், 25, கூலித் தொழிலாளி. இவர் விருதாச்சலம் நகரத்திற்குட்பட்ட பழமலைநாதர் நகரில் அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள கட்டிட வேலை மற்றும் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு இவர் பழமலைநாதர் நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் இருந்துள்ளார். அப்போது செவ்வாய்க்கிழமை(9.9.2025) அதிகாலை 3 மணிக்கு அந்தத் திருமண மண்டபத்திற்கு மூன்று வாலிபர்கள் வந்துள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த கார்த்திக், ஏன் இங்கு வந்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் கார்த்திக்கை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் இரண்டு வாலிபர்கள் கார்த்திக்கைப் பிடித்துக்கொண்டு, ஒருவர் கம்பி மற்றும் கட்டையால் தாக்கி முட்டிபோட வைத்து அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

இவர்களிடமிருந்து தப்பி ஓடிய கார்த்திக், அவரது உறவினரான சகோதரி வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறி அழுதுள்ளார். உடனடியாக இவரை அவசர ஊர்தி மூலம் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனை அறிந்த அந்த வாலிபர்கள், கார்த்திக்கைத் தாக்குவதற்கு அவசர ஊர்தியைப் பின்தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால், மருத்துவமனை அருகில் இருந்த பெட்டிக்கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனைத் தட்டிக் கேட்ட உரிமையாளர் சுந்தரமூர்த்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோரையும் மூன்று வாலிபர்களும் தாக்கியுள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, விருதாச்சலம் ரயில்வே மேம்பாலம் அருகே நடந்து சென்றபோது, கள்ளக்குறிச்சியில் இருந்து விருதாச்சலம் நோக்கி வந்த அரசு பஸ்ஸை வழிமறித்து மூன்று வாலிபர்களும் ஓட்டுநர் கணேசன் மற்றும் நடத்துநர் தென்னரசு ஆகியோரைத் தாக்கியுள்ளனர். பின்னர் ஓட்டுநரை மது பாட்டிலால் தலையில் அடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். பலத்த காயமடைந்த ஓட்டுநரைப் பயணிகள் உடனடியாக மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அப்போது அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இவர்கள் மூவரும் பழமலைநாதர் நகர் பகுதியைச் சேர்ந்த காமராஜர் மகன் கந்தவேல், 21, முருகன் மகன் விக்னேஷ், 22, மற்றும் பாலாஜி, 21 என்பது தெரியவந்தது.

ரகளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் விருதாச்சலம் அடுத்த கன்னியாகுப்பம் முந்திரி தோப்பில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை காவலர்கள் விரைந்து சென்று மூன்று வாலிபர்களையும் சுற்றி வளைத்து மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது கந்தவேல் என்பவர் காவலர் வேல்முருகன், வீரமணி ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது உதவி ஆய்வாளர் சந்துரு துப்பாக்கியால் கந்தவேலின் வலது காலில் சுட்டார். அவரது கூட்டாளி விக்னேஷ் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் பாலாஜி என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

Advertisment

இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள பாலாஜியைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.