கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள மல்லேஸ்வரத்தில் வாழ்ந்து வந்தவர் எழுத்தாளர் ஆஷா ரகு (46). இவர் சிறந்த கன்னட இலக்கியவாதி ஆவார். மேலும் இவர் ஒரு சிறந்த பதிப்பாளராகவும் இருந்து வந்தார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு வசனம் எழுதி வந்ததோடு, துணை இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். இப்படியாக பன்முகக் கலைஞராக அறியப்பட்ட இவர், கன்னட மக்களிடம் நன்கறியப்பட்ட பிரபலமாக இருந்து வந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் ஆஷா மல்லேஸ்வரத்தில் உள்ள, அவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையின் படி, “கடந்த சனிக்கிழமையன்று ஆஷா தனது வீட்டினுள் ஒரு அறையில் இருந்துள்ளார். அறையில் இருந்த ஆஷா வெளியில் வரவில்லை. மேலும் உள்ளேயிருந்து நீண்ட நேரம் எந்த சத்தமும் வராததால், குடும்ப உறுப்பினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, ​​ஆஷா சடலமாகக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது விசாரணையில், அது இயற்கையான மரணம் இல்லை என்பதும் அறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, ஆஷாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிய வந்துள்ளது. கன்னட இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட நாவலாசிரியரான ஆஷா, வசனகர்த்தாவாகவும், உதவி இயக்குநராகவும் தொலைக்காட்சித் துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். இந்த நிலையில் இவரது இழப்பு திரைப்பிரபலங்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us