திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வசித்து வருபவர் மருத்துவர் சிவசுப்பிரமணியம் (வயது 50). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி உயர்வு பெற்று அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் மாலை நேரத்தில் வீட்டில் தனியாக கிளினிக்கும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதி  நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்குப் பணி மாற்றம் செய்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி உத்தரவிட்டுள்ளார். 

Advertisment

அதன் அடிப்படையில் பிப்ரவரி 4 ஆம் தேதி அவர் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பார்த்து விட்டு வந்துள்ளார். மாலை வீட்டிற்கு வந்து செல்போனை  வீட்டில் வைத்து விட்டு வெளியில் சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது ஊழியர் வீட்டின் அக்கம்பக்கம் பார்த்து விட்டு பின்னர் வீட்டின் பக்கத்தில் புதியதாகக் கட்டி வரும் வீட்டிற்குச் சென்று பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். அப்போது அங்குத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர், அவர்களின் உதவியோடு உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிவசுப்பிரமணியம் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக அவரது மனைவி போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார். இறந்த மருத்துவர் சிவ சுப்பிரமணியத்துக்கு வித்யா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.