Police are asking destroy CCTV evidence Allegation by victim in Sivagangai incident
கடந்த 2ஆம் தேதி இரவு, திருநெல்வேலி நெல்லை நாங்குநேரி அருகே கடம்போடு வாழ்வு என்ற கிராமத்தில் இருசக்கர வாகனங்களில் அரிவாளுடன் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து பெரும்பத்து கிராமத்திற்குச் சென்று அங்குள்ள டீக்கடை மீது பெட்ரோல் குண்டை வீசி கண்ணில் தெரிந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த கொடூரச் சம்பவத்தில் வடமாநில தொழிலாளர் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், 4 பேர் படுகாயமடைந்தனர். ஒரே இரவில் பட்டியலின சமூகத்தினர் அதிகம் வாழும் கிராமங்களுக்கு அத்துமீறி நுழைந்து பொதுமக்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய கும்பல் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கஞ்சா போதையில் நடந்த தாக்குதலா அல்லது சாதிய மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்து ரத்தம் கூட காயாத நிலையில், அடுத்த இரண்டு நாட்களிலே சிவகங்கை மாவட்டத்தில் அதே போன்று கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமம் அமைந்துள்ளது. பட்டியலினத்தவர்கள் அதிகம் வாழும் இந்த கிராமத்திற்குள் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த மக்கள் மீது அரிவாள் மற்றும் பட்டாக்கத்திகளால் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர். ஒருவரைத் தாக்கும் நோக்கில் வந்த கும்பல், வழியில் தடுத்தவர்களையும் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக முத்தனேந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியபோது ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம், இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக அமைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், சாதிப் பெயரைக் கேட்டு தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த தாக்குதல் நடத்திய கும்பல் பைக்கில் வந்து அரிவாளுடன் இறங்கித் தாக்கும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், அரிவாளால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சுமார் 5:30 மணி இருக்கும். நான் கடைக்கு போயிருந்தேன். அப்போது இரண்டு பேர் வண்டியில் வந்தார்கள். அதில் ஒரு பையன் பக்கத்து ஊர் பையன். வந்த உடனே வண்டியில் ஏறுனு சொன்னார்கள். நான் எதுக்குன்னு சொல்றதுக்குள் என்னை அடிச்சிட்டாங்க. அதோட நான் வீட்டுக்கு வந்து என்னுடைய மனைவியிடம் சொல்லிட்டு இருந்தேன். அப்போது மூன்று பைக்கில் 9 பேர் வந்து என் கையில் வெட்டினார்கள். எங்க அண்ணனனையும் அவரோடு பையனையும் வெட்டிட்டாங்க. அதுக்கு அப்புறம் அங்கிருந்த பெண்கள் மீதும் வெட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதோடு நான் அங்கிருந்து தப்பித்து பின்னாடி போய் ஒழிஞ்சுட்டேன். போலீஸ் சீக்கிரம் வந்திருந்தா நிறைய பிரச்சனை நடந்திருக்காது. அப்புறம் 108 ஆம்புலன்ஸில் ஹாஸ்பிட்டலுக்கு வந்துட்டேன். சாதியை ரீதியாக சொல்லித்தான் எங்களை அடிச்சாங்க. உன் பேர் என்ன? என்ன சாதின்னு கேட்டாங்க. நான் இந்த மாதிரி ஆளு சொன்ன உடனே அடிச்சிட்டாங்க. அவங்களுக்கும் எனக்கும் எந்த முன்விரோதமும் எதுவுமே கிடையாது.
எங்க ஏரியாவுக்குள் தற்காப்புக்காக சிசிடிவி கேமரா வச்சுருக்கோம். அவங்க வந்த சிசிடிவி கேமரா காட்சி ஆதாரம் இருக்கு. ஆனால் அதை அழிக்க டிஎஸ்பி சொல்றார். பெரிய அதிகாரிகள் என் மனைவியை தனியாக கூப்பிட்டு இந்த சிசிடிவி கேமரா ஆதாரத்தை டெலிட் பண்ண சொன்னாங்க. இந்த ஊருல எங்களால வாழவே முடியல. எங்கே போனாலும் பயந்துட்டே தான் போக வேண்டியிருக்கு” என்ற பயம் கலந்த வேதனையோடு தெரிவித்தார்.
Follow Us